பட்டா மாறுதல் உத்தரவை செயல்படுத்தாததால் மதுரை ஆட்சியர், வட்டாட்சியருக்கு 6 வாரம் சிறை

விவசாயிக்கு 2 மாதத்தில் பட்டா மாறுதல் செய்து தர நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்தத் தவறியதால், மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் வட்டாட்சியரை 6 வாரம் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மேலூர் உரிமையியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விவசாயிக்கு 2 மாதத்தில் பட்டா மாறுதல் செய்து தர நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்தத் தவறியதால், மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் வட்டாட்சியரை 6 வாரம் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மேலூர் உரிமையியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன்கள் உசேன் முகமது, ஜவஹர் அலி. இவர்கள் தாங்கள் வாங்கிய நிலத்தை உள்பிரிவு செய்து தனிப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்தனர். மனுவை வட்டாட்சியர் ஏற்காததால், கடந்த 2004-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, 2006-ஆம் ஆண்டு மேலூர் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீடு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் கோரியபடி இரண்டு மாத காலத்துக்குள் இடத்தை உள்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்து கொடுக்குமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். எனினும், இந்த உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மனுதாரர்கள் மேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 2 மாதத்தில் பட்டா மாறுதல் செய்து தர உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறிய மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், மேலூர் வட்டாட்சியர் தமிழ் செல்வி ஆகியோரை 6 வாரம் நீதிமன்றக் காவலில் வைக்கவும், அவர்களது வாகனங்களை ஜப்தி செய்யுமாறும் மேலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி என்.சுரேஷ் உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும், தாற்காலிகமாக உத்தரவை நிறுத்தி வைக்கவும் வட்டாட்சியர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
அரசு வழக்குரைஞரின் தவறு: மாவட்ட நிர்வாகம் விளக்கம்
மதுரை, பிப். 3: மேலூர் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
இவ்வழக்கில் கடந்த 2014 டிசம்பர் 23-ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர், மேலூர் வட்டாட்சியர் ஆகியோர் 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, வருவாய்த் துறையினர், நில அளவைத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இதுகுறித்து அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் சரியான தகவல் அளிக்காததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலூர் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com