பாலாற்றில் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசு தீவிரம்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்திக் கட்டவும், புதிய தடுப்பணைகள் ஏற்படுத்தவும் அம்மாநில அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், எஸ்.எம். பள்ளம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே உயர்த்திக் கட்டப்பட்டுள்ள தடுப்பணை.
ஆந்திர மாநிலம், எஸ்.எம். பள்ளம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே உயர்த்திக் கட்டப்பட்டுள்ள தடுப்பணை.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்திக் கட்டவும், புதிய தடுப்பணைகள் ஏற்படுத்தவும் அம்மாநில அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாறு, கர்நாடகம் மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகி, அங்கு 90 கி.மீ. பாய்ந்து பின்னர் ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. பின்னர் தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக சுமார் 233 கி.மீ. தொலைவு பாய்ந்து கடலில்
கலக்கிறது.
பாலாற்றின் மூலம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் சுமார் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தன. இந்நிலையில் ஆந்திர அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணையைக் கட்ட முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு மத்திய நீர்வளக் குழுமத்துடன் இரு மாநில அரசுகளும் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தியது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விரைவுபடுத்தக் கோரி, தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் 2011-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. மேலும் தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தியதால் தடுப்பணை கட்டும் பணி நிறுத்தப்
பட்டது.
எனினும் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஆந்திர அரசு எஸ்.எம்.பள்ளம், பெரும்பள்ளம், சாமுண்டிபள்ளம், ஒக்கல்ரேவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரத் தடுப்பணைகளைக் கட்டியது. மேலும் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான வாணியம்பாடியை அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயில் அருகே 5 அடியாக இருந்த தடுப்பணையை 12 அடியாக உயர்த்திக் கட்டியது. இதனால் தமிழகத்துக்கு பாலாற்றின் நீர் வரத்து முற்றிலும்
தடைபட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலப் பகுதியான எஸ்.எம்.பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே
5 அடி உயர தடுப்பணையை 12 அடியாக உயர்த்திக் கட்டியுள்ளது. மேலும் சாமுண்டிபள்ளம், ஒக்கல்ரேவ் ஆகிய பகுதியில் உள்ள 5 அடி உயர தடுப்பணைகளை உயர்த்திக் கட்டவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிக்களுக்கான பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் புதிய 2 தடுப்பணைகளைக் கட்டவும் அம்மாநில அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. ஆந்திர அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு ஆந்திர அரசுடன் தொடர்பு கொண்டு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், புதிய தடுப்பணைகள் கட்டும் முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும். பாலாற்றின் மீதான தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com