தருமபுரியில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸýவுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், ஏரியூர் உள்ளிட்ட 14 இடங்களில் வெள்ளிக்கிழமை பாமக கட்சியினரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி வந்தார். முற்பகல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு, மதிய உணவுக்குப் பிறகு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, பிற்பகலில் தருமபுரியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை செய்துகொண்ட அவர், மாலை பெங்களூரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.