திமுக தலைவர் கருணாநிதி எப்படி இருக்கிறார்?

முன்னாள் முதல்வர் அண்ணா மறைந்து 48 ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திமுக தலைவர் கருணாநிதி வரவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி எப்படி இருக்கிறார்?

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணா மறைந்து 48 ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திமுக தலைவர் கருணாநிதி வரவில்லை.

உடல்நிலை காரணமாக கருணாநிதி அண்ணா நினைவிடத்துக்கு வரவில்லை என்பது செய்தி. ஆனால், உண்மையிலேயே கருணாநிதியின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது தான் அனைவரின் கேள்வியும்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவு, ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியேற்பு, அதிமுக பொதுச் செயலராக சசிகலா பதவியேற்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் என சாதாரண பாமரனையும் இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கும் அளவுக்கு தமிழகத்தில் பரபரப்புகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

ஒரு சின்ன செய்தியையும், ஆளுங்கட்சியின் பேச்சுக்களையும் குறிப்பெடுத்து அதற்கு சரியான பதிலடி என்ற வகையில் அறிக்கை தரும் கருணாநிதியால் எப்படி இந்த சூழ்நிலையில் அமைதியாக இருக்க முடிகிறது என்பதே அடுத்த கேள்வி.

இதற்குப் பிறகும், அவரது உடல்நிலைதான் காரணம் என்றால், அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய வேண்டியது அவசியமாகிறது.

ஆம், வந்தால் போகாது என்ற நீரழிவோ, ரத்த கொதிப்போ இதுவரை அவரது உடலை அணுகாத நிலையில், மூட்டு வலி மட்டுமே இதுநாள்வரை அவருக்கு மிகப்பெரிய நோயாக இருந்தது.

2 மாதங்களுக்கு முன்பு, உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்றார். அதன் பிறகுதான் திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி.

பூரண குணமடைந்து வீடு திரும்பினாலும், கட்சிப் பணிகளில் ஈடுபடாமல், தனிமையில் தான் இருந்தார். தொடர் சிகிச்சைகளின் பலனாக அவர் நோயில் இருந்து குணமடைந்தாலும், அவரது உடல் நிலை மூப்பு காரணமாக தொய்வடைந்துள்ளதுதான் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

93 வயதை பூர்த்தி செய்திருக்கும் கருணாநிதிக்கு ஞாபக மறதியும் ஏற்பட்டுள்ளது. நீர் ஆகாரத்தை மட்டுமே அவரது உடல்நிலை ஏற்றுக் கொள்வதாகவும், மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில சமயங்களில், தன்னைப் பார்க்க வருவோரை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவரது ஞாபத் திறன் குறைந்து காணப்படுவது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.

திடீரென தனது மகளை, மகனைப் பார்த்து சிரித்து எதையோ சொல்ல வரும் கருணாநிதியால் மேற்கொண்டு பேச இயலாமல் போகிறது. ஆனால், அவர் தங்களை அடையாளம் கண்டு கொண்டதை எண்ணி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடையும் நிலைதான் நீடிக்கிறது.

இதற்கிடையே, காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி சென்றபோது, அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது மூச்சை இழுத்து விடுமாறு கூற, இழுத்து 'விட்டு விடக் கூடாதே' என்றுதான் இங்கே வந்தேன் என நகைச்சுவையாக பதில் சொன்னாராம் கருணாநிதி.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு ஒன்று கருணாநிதியை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். ஆனால், கருணாநிதி விஷயத்தில் நோயை குணப்படுத்தலாம், மூப்பை சரி செய்ய முடியாதே என்பதுதான் மருத்துவர்கள் சந்திக்கும் சிக்கல்.

எதுவாக இருந்தாலும், தனக்கிருக்கும் நெஞ்சுறுதியின் காரணமாக அவர் மீண்டும் அரசியலில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்றே திமுக தொண்டர்கள் இன்று வரை உறுதியாக நம்புகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com