பதவியைப் பற்றி கவலைப்படாதீர்: பன்னீர்செல்வத்துக்கு நிர்வாக டிப்ஸ் கொடுக்கும் ஸ்டாலின்

முதல்வர் பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் தமிழக நலனைக் காப்பாற்றுவதில் முழு கவனம் செலுத்துவதோடு, அரசு நிர்வாகம் தன் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பதவியைப் பற்றி கவலைப்படாதீர்: பன்னீர்செல்வத்துக்கு நிர்வாக டிப்ஸ் கொடுக்கும் ஸ்டாலின்


சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் தமிழக நலனைக் காப்பாற்றுவதில் முழு கவனம் செலுத்துவதோடு, அரசு நிர்வாகம் தன் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டியும், ஏற்கனவே இருக்கின்ற தடுப்பணைகளின் உயரத்தைக் கூட்டியும் ஆந்திர மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளார்கள். விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்திற்கும் பேராபத்து ஏற்படுத்தி விட்டதாக கவலையடைந்துள்ளார்கள். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களின் குப்பம் தொகுதியிலேயே இது போன்று தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளதை தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

1892- ஆம் ஆண்டு “சென்னை-மைசூர் ஒப்பந்தத்தில்” உள்ள அட்டவணை “A” ல் குறிப்பிட்டுள்ளவாறு “பல மாநிலங்களுக்கு இடையில் பாயும் 15 முக்கிய நதிகளில் பாலாறும் ஒன்று. இந்த ஒப்பந்தப்படி பாலாற்று நீரை தேக்கவோ, அல்லது திருப்பவோ புதிய அணை, தடுப்பணை போன்றவற்றை ஆந்திர மாநில அரசு கட்டக்கூடாது என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் இதை ஆந்திர மாநில அரசு சர்வ சாதாரணமாக மீறி புதிய தடுப்பணைகளை கட்டி, உயரத்தை அதிகரிப்பதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சென்ற ஜூலை மாதம் இங்கு புதிய தடுப்பணைகள் கட்டும் பணி துவங்கப்பட்ட போது அதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கனக நாச்சியம்மன் கோயில் அர்ச்சகரை அம்மாநில அறநிலையத்துறை அதிகாரிகள் விரட்டி அடித்தார்கள்.

இதையெல்லாம் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அவசர அவசரமாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாலாறு வழக்கில் ஒரு மனுவை தாக்கல் செய்து “புதிய தடுப்பணைகள் கட்டவோ, இருக்கின்ற தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவோ ஆந்திர மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று ஒரு மனுவை மட்டும் தாக்கல் செய்து விட்டு இன்று வரை எந்த தடையுத்தரவும் பெறாமல் அதிமுக அரசு அமைதி காக்கிறது.

18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் கோரிய தடையைப் பெறுவதற்கு இதுவரை அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பிய போது பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை அவர்கள் தடுப்பணை கட்ட முடியாது” என்று பதிலளித்தார். ஆனால் நடைபெறும் நிகழ்வுகள் அவர் அளித்த பதிலுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. ஆந்திர மாநில அரசு தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டும் முயற்சிகளையும், ஏற்கனவே இருக்கின்ற தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தும் வருகிறது.

பாலாறு தண்ணீர் தடுக்கப்படுவதால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி, கல்பாக்கம் அணு மின் நிலையமும் பாதிக்கப்படுகிறது. ஏறக்குறைய 4.50 லட்சம் ஏக்கரில் உள்ள விவசாயத்திற்கான நீர் ஆதாரம், குடிநீர் ஆதாரம் எல்லாம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக நலன்களை பாதுகாக்க அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதோடு அக்கறையும் காட்டவில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் திடீரென்று பதவியிலிருந்து விலகியிருப்பது முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சிக்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சி தலைமைக்கும் ஏற்பட்டுள்ள பனிப்போரின் துவக்கமாகவே தெரிகிறது.

இப்படியொரு நிலையற்ற ஆட்சியில் பாலாறில் புதிய தடுப்பணைகள், சர்க்கரை மான்யம் ரத்து செய்யப்படும் ஆபத்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாமல் போனது, “நீட் தேர்வு” சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் குழப்பம், மெரினா புரட்சியான மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை காவல்துறை அதிகாரிகளே சீர்குலைத்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள், உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்தி, தமிழக நலனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிர்வாகம் தன் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com