அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: சீறி பாயும் காளைகளும்... அடக்க துடிக்கும் காளையர்களும்...!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு துவங்கி நடந்து வருகிறது. சீறி பாயும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க துடிக்கும் காளையர்கள் கூட்டம்
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: சீறி பாயும் காளைகளும்... அடக்க துடிக்கும் காளையர்களும்...!

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு துவங்கி நடந்து வருகிறது. சீறி பாயும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க துடிக்கும் காளையர்கள் கூட்டம் நிரம்பி உள்ளன.

வரலாறு படைத்த மாணவர்கள், இளைஞர்களின் அறவழிப் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை அசைத்துப்பார்த்தது. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை இயற்ற வைத்தது. ஜல்லிக்கட்டு சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்கள் உலகப் பெயர்போனவை.

இதில், முதல் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 916 மாடுகள் களமிறங்க உள்ளன. 721 மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க உள்ளனர். காலை 8 மணிக்கு 4 கோவில் காளைகளை அவிழ்த்துவிட்டு போட்டியை ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு குழுவினர் தொடங்கி வைத்தனர். வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியாக கருதப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சீறிவரும் காளைகளை அடக்க மதுரை மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான இளைஞர்களும், ஜல்லிக்கட்டை காண ஏராளமான மக்கள் குவிந்து வருவதால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

பாரம்பரியம் மிக்க அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு முறையே பிப்ரவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போட்டிக்கான முன்னேற்பாடுகள் செய்ய கால அவகாசம் தேவை என்பதால், ஜல்லிக்கட்டு போட்டிகளை வரும் 10-ஆம் தேதிக்கு அலங்காநல்லூர் கிராம நிர்வாகம் தள்ளி வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சட்ட விதிகளையும் அமல்படுத்துவதை மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் முன்னின்று கவனித்து வருகிறார். 15 மருத்துவ குழுவினர், இரண்டு கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ், 13 மொபைல் மெடிக்கல் யூனிட், 8 ஆம்புலன்ஸ்கள், 5 தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார்.

காளைகள் பதிவு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளக் கூடிய சுமார் 913 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1050 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதலா அவனியாபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி வாடிவாசலை தாண்டி காளைகள் துள்ளிக்குதித்து வருகின்றன. அவற்றை ஆர்வத்தோடு மாடு பிடி காளையர்களும் துடிப்புடனும் ஆர்வத்துடனும் பங்கேற்று வருகின்றனர். இந்த வீர விளையாட்டை காண ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் அவனியாபுரத்தில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com