எண்ணெய் கசிவு: எண்ணூர் கடற்கரை பகுதியில் முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

எண்ணெய் கசிவால் மாசடைந்துள்ள எண்ணூர் கடற்கரை பகுதிகளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை: எண்ணெய் கசிவால் மாசடைந்துள்ள எண்ணூர் கடற்கரை பகுதிகளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்து வருகிறார்.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி 28-இல் இரண்டு கப்பல்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கப்பல்கள் சேதமடைந்தன. இதில் ஒரு கப்பலிலிருந்து எண்ணெய்ச் கசிவு ஏற்பட்டது. இது எர்ணாவூர் பாரதியார் நகர் அருகே கடற்கரையையொட்டி படிந்துள்ளது. சுமார் 200 டன் எடையுள்ள இந்த எண்ணெய்க் கழிவுகள் ஆள்கள் மூலம் கடந்த ஒரு வாரமாக அகற்றப்பட்டு வருகிறது. பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எண்ணெய்க் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்கும் பணி நேற்று சனிக்கிழமை தொடங்கியது. கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு வரும் எண்ணெய்க் கழிவுகள் பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே உள்ள காலியான இடத்தில் சுமார் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு சுமார் ஒன்றரை அடி அளவில் பள்ளம் தோண்டப்பட்டு இதன்மீது தார்பாலின் பாய்கள் விரிக்கப்பட்டன. பின்னர் எண்ணெய்க் கழிவுகளும், மணலும் கலக்கப்பட்டது. இதில் மைக்ரோசோம்ஸ் என்ற நுண்ணுயிரிகள் மற்றும் ஊட்டச் சத்துகள் இக்கலவையுடன் சேர்க்கப்பட்டன. இதற்கான செயல் விளக்கத்தை ஃபரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை விஞ்ஞானிகள் எஸ்.கே.பூரி, எம்.கே.உப்ரேதி ஆகியோர் செய்து காண்பித்தனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி எண்ணெய்க் கழிவு குறித்த தகவல்கள் கப்பல் துறை அமைச்சகம் மூலம் பெட்ரோலிய அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஜய் பிரகாஷ் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்து நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு இத்திட்டம் அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் துறையின் முக்கிய அதிகாரிகளுடன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இச்செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மேலும் இதன் மூலம் எண்ணெய்க் கழிவுகளை அழிப்பது குறித்த பொதுமக்களின் பயம் முடிவுக்கு வரும் என இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று எண்ணூரில் எண்ணெய் படலத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் பின்னர் பேட்டியளித்த அவர், பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எண்ணெய் கசிவால் மாசடைந்துள்ள கடற்கரை பகுதிகளை இன்று ஆய்வு செய்து வருகிறார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com