காட்சிக் கூடமாக மாறிய எர்ணாவூர் கடற்கரை

கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணி ஏழாவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது.
விபத்தில் சேதமடைந்த டான் காஞ்சிபுரம் கப்பலை நேரில் பார்வையிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். உடன், எண்ணூர் காமராஜர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார், சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன்.
விபத்தில் சேதமடைந்த டான் காஞ்சிபுரம் கப்பலை நேரில் பார்வையிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். உடன், எண்ணூர் காமராஜர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார், சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன்.

கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணி ஏழாவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது. இந்த நிலையில், எர்ணாவூர் கடற்கரை கண்காட்சிக் கூடமாக மாறி வருகிறது.
எண்ணெய்ப் படலத்தை ஆள்கள் வாயிலாக அகற்றும் பணி தொடங்கியது. முதலில் எண்ணெய்க் கழிவு 4 டன் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏழாவது நாளான சனிக்கிழமை 200 டன் அளவைத் தாண்டிவிட்டது. இந்தப் பணியில் பல்வேறு துறை ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், மீனவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப் பார்வையிட ஏராளமானோர் வருகை தருகின்றனர். வழுக்கி விழும் ஆபத்து நிறைந்த பாறாங்கற்களில் பொதுமக்கள் ஏறி வருவதை போலீஸாரும் தடுப்பதில்லை.
இதையடுத்து, எண்ணூர் துறைமுகம் சார்பில் சுமார் ஆயிரம் பேருக்கு தொடர்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தாற்காலிக தள்ளுவண்டிக் கடைகளும் அதிகரித்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னணித் தலைவர்கள் வந்தவாறு உள்ளனர்.
இந்த நிலையில், பைபர் படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு எண்ணூர் துறைமுகம் வரை கேமராக்களுடன் நிருபர்கள் சென்று திரும்புகின்றனர். இதற்கு ரூ.5 ஆயிரம்வரை கட்டணமாக மீனவர்கள் வசூலிக்கின்றனர்.
இதுதவிர, கடும் பாதுகாப்பு வளையத்துக்குள் துறைமுக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலைப் படம் எடுக்க கடல் மார்க்கமாக வருவோர் தடுக்கப்படுவதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விபத்தில் சிக்கிய கப்பல் கேப்டனிடம் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை
விபத்தில் சேதம் அடைந்த டான் காஞ்சிபுரத்தின் கேப்டனிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.
விபத்து குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் கடல்சார் வணிகத் துறையின் பொது மேலாளர் ஏ.கே.குப்தா அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடக்கிறது. விபத்துக்கான காரணங்கள், மனிதத் தவறுகள், நிர்வாகக் குளறுபடிகள் குறித்த யூகங்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.
இந்த நிலையில், துறையின் அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் துறைமுகத்துக்கு சனிக்கிழமை வருகை தந்தார்.
பின்னர் கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டான் காஞ்சிபுரம் கப்பலை பார்வையிட்டார். பின்னர் கப்பலின் கேப்டனிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் துறைமுக அதிகாரிகளுடன் சில விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
அப்போது துறைமுகத் தலைவர்கள் பி.ரவீந்திரன் (சென்னை),
எம்.ஏ.பாஸ்கராச்சார் (எண்ணூர் காமராஜர்) ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com