காவல் துறை அதிகாரி விஜயகுமார் கருத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மறுப்பு

தமிழக அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜயகுமார் தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
காவல் துறை அதிகாரி விஜயகுமார் கருத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மறுப்பு

தமிழக அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜயகுமார் தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜயகுமார் சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் குறித்து எழுதியுள்ள "சேசிங் த பிரிக்கன்ட்' என்ற புத்தகத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு துப்பாக்கி வாங்கித் தருவதில் தொடர்புடைய தொழிலதிபர் ஒருவர், வீரப்பனுக்கு கண் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதைக் கண்டறிந்த தமிழக அதிரடிப்படை, அந்த தொழிலதிபரின் உதவியோடு காவல் ஆய்வாளர் வெள்ளைத்துரையை வீரப்பனிடம் அனுப்பியது. அவர், உதவிகள் செய்வதுபோல சந்தனக் கடத்தல் வீரப்பனை காட்டைவிட்டு வெளியே அழைத்துவந்து என்கவுண்ட்டர் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறை அதிகாரி விஜயகுமார் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் வீரப்பன் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கருத்தை சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மறுத்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை மேச்சேரி அருகேயுள்ள பொட்டனேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது கணவருக்கு உணவு கொடுப்பவர்களை தங்கள் வசப்படுத்திய அதிரடிப் படையினர் அவருக்கு மோரில் விஷம் கலந்துக் கொடுத்து மயக்கமடையச் செய்து, தங்களது முகாமுக்கு அவரைக் கொண்டுச் சென்று அவரைச் சித்திரவதை செய்து கொன்றனர். அதன் பின்னரே அவரை என்கவுண்ட்டர் செய்தது போல திட்டமிட்டு நாடகம் நடத்தி உள்ளனர். நான், இதுகுறித்து தொடக்கத்திலேயே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அதிகாரம் அவர்கள் கையில் இருந்ததால், என்னால் உண்மையை நிரூபிக்க முடியாமல் போனது. எனது கணவர் யாரையும் நம்பி காட்டைவிட்டு வெளியே வர மாட்டார். நான் அவருடன் மூன்று ஆண்டுகள் காட்டில் இருந்துள்ளேன். அப்போது இரவு நேரங்களில் மலைக் கிராமங்களில் உணவுப் பொருள்களை வாங்க வருவோம். அப்போது ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே அவர் மறைந்திருப்பார். நாங்கள் மட்டுமே வந்து பொருள்களை வாங்கிச் செல்வோம்.
அவர் பார்க்க விரும்பும் நபர்களைக் கூட வனப் பகுதிக்கு அழைத்து வந்துதான் பார்ப்பது வழக்கம். அப்படியே அவர், கண் சிகிச்சைக்கு வந்தாலும், அவர் ஒருவர் மட்டுமே வந்திருப்பார் அல்லது அவருடன் துணைக்கு ஒருவர் மட்டுமே வந்திருப்பார். மொத்தமாக நால்வரும் ஒரே நேரத்தில் வெளியேவருவது என்பது சந்தேகத்துக்கு உரியது. சம்பவம் நடந்த அன்று நான் பாப்பாரப்பட்டிக்கு அருகே உள்ள ஒட்டப்பட்டியில்தான் இருந்தேன். அந்த இடத்துக்கு போலீஸ் ஏன் என்னை அழைத்துச்செல்லவில்லை?. எனது கணவரின் உடலைப் பார்க்க நான் காலை 8 மணிக்குச் சென்றுவிட்டேன்.
ஆனால், என்னை ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு பிரேதப் பரிசோதனை முடிந்து மாலை 6 மணிக்குத்தான் என்னைப் பார்க்க அனுமதித்தனர். விஜயகுமார் தன்னை ஒரு பெரிய திறமையான அதிகாரியாக முன்னிலைப்படுத்தவே இந்தத் தகவலை இப்போது கூறியுள்ளார். இந்தத் தகவலை வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டபோதே தெரிவிக்காதது ஏன்? என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com