சட்டப் பேரவைத் தேர்தல்: பஞ்சாபில் 75%, கோவாவில் 83% வாக்குப் பதிவு

பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் முறையே 75, 83 சதவீத வாக்குகள் பதிவாயின.
கோவா தலைநகர் பனாஜியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.
கோவா தலைநகர் பனாஜியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.

பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் முறையே 75, 83 சதவீத வாக்குகள் பதிவாயின.
கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது.


அதன்படி, கோவா, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சனிக்கிழமை (பிப்.4) வாக்குப் பதிவு நடைபெற்றது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் வாக்குப் பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இரண்டு மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பிறகு, அங்கு புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது.
தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள உதவும் கருவி முதல்முறையாக இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
பஞ்சாப் தேர்தலில் 75 சதவீத வாக்குப் பதிவு: பஞ்சாப் பேரவைத் தேர்தலில் மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாயின.
இதுகுறித்து அந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வி.கே. சிங் கூறியதாவது:
பஞ்சாபில் சட்டப் பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதாகின. பிறகு, புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு வாக்குப் பதிவு மீண்டும் நடத்தப்பட்டது. மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாயின என்று வி.கே.சிங் தெரிவித்தார்.
வன்முறையில் 2 பேர் காயம்: இதற்கிடையே, சங்ரூர் மாவட்டம், சுல்தான்பூர் கிராமத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
முதல்வர் நன்றி: இந்நிலையில், பஞ்சாபில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற உதவிய மக்களுக்கு நன்றி என்று அந்த மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.
பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டணியே இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அந்தக் கூட்டணிக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கோவாவில் 83 சதவீத வாக்குப் பதிவு: கோவாவில் மொத்தம் உள்ள 40 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 83 சதவீத வாக்குகள் பதிவாயின.
இந்தத் தகவலை அந்த மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
கோவாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் அரங்கேறாமல் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தலைநகர் பனாஜியில் உள்ள வாக்குப் பதிவு மையம் ஒன்றில் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வரிசையில் நின்றுகொண்டிருந்த 78 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மொத்தம் 11.10 லட்சம் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலும் 81.8 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனியாகவும் போட்டியிடுகின்றன. ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருந்த மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, இம்முறை அதிலிருந்து விலகி சிவசேனை, கோவா சுரக்ஷா மஞ்ச் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
அதிகபட்ச வாக்குப் பதிவு தங்கள் கட்சிகே சாதகமாக அமையும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கருத்துத் தெரிவித்தன.


 பஞ்சாப் பதிண்டா நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கக் காத்திருந்த வாக்காளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com