நீதிபதியை விமர்சித்த விவகாரம்: வைகோ மீது அவமதிப்பு வழக்கு

உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை விமர்சனம் செய்த வைகோ மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் தனது

உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை விமர்சனம் செய்த வைகோ மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் தனது கருத்தை தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், "உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.ஏ. ஜோசப் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது,தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், மறைந்த முதல்வர் மரணம் குறித்த உண்மையை வெளிக் கொண்டு வர அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டுமா? என, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், புத்தாண்டு நாளன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது மதிமுக பொது செயலாளர் வைகோ, "மறைந்த ஜெயலலிதா பற்றி நீதிபதி தெரிவித்த கருத்து அவரது மரணத்தைக் கொச்சைப்படுத்துவது போன்று உள்ளது. நீதிபதி ஒருவர் இப்படி பேசியது தவறு' என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை விமர்சித்து கருத்து வெளியிட்ட வைகோ மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சூரிய பிரகாசம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து அரசு தலைமை வழக்குரைஞர் கருத்து தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com