ராஜமுந்திரியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் கடத்திவரப்பட்ட 3.36 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 3.36 கிலோ தங்கத்தை ஆரம்பாக்கத்தில் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்.
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்.

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 3.36 கிலோ தங்கத்தை ஆரம்பாக்கத்தில் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி பகுதியில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசுப் பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மத்திய நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி. அருண்குமார், திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எஸ்.பி அருண்குமார் தலைமையில் ஒரு குழுவும், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுடலைமணி, பொன்னேரி டி.எஸ்.பி. மாணிக்கம் தலைமையில் மற்றொரு குழுவினரும் தமிழக எல்லை பகுதியான ஆரம்பாக்கத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 6.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசுப் பேருந்தை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் ராஜமுந்திரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது அதில் துணி, காய்கறிகள், உணவுப் பொருள்களை வைத்து அதற்கடியில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் 4 பேரையும் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் மகன் காஜா நஜிமுதீன் (42), முகமது நஜிமுதீன் மகன் சகாபுதீன் (38), முகமது அலி ஜின்னா மகன் ஜமாலுதீன் (30), முஸ்தபா மகன் முகமது இக்பால் (35) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து தலா 168 கிராம் எடையுள்ள 20 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 கிலோ 360 கிராம் எடை கொண்ட இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி ஆகும்.
இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சாம்சன் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 4 பேரையும் சென்னைக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
மேற்கண்ட 4 பேரும் சென்னையில் சிறு கடைகள் வைத்து நடத்தி வரும் நிலையில், இவர்கள் கூலிக்கு தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இதைத் தொடர்ந்து இவர்களுக்குப் பின்னால் உள்ள கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com