சுனாமியையும் எதிர்கொள்ளும் கூடங்குளம் பாதுகாப்பு அம்சங்கள்!

கூடங்குளம் உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பரவலாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
சுனாமியையும் எதிர்கொள்ளும் கூடங்குளம் பாதுகாப்பு அம்சங்கள்!

கூடங்குளம் உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பரவலாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் கடந்த 4 நாள்களாக அதிகம் விவாதிக்கப்படும் பொருளாகிப் போன கூடங்குளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெளிவுபெற வேண்டியது அவசியமானது.

இந்திய-ரஷிய கூட்டுறவில் கூடங்குளத்தில் முதல் 2 உலைகள் இயங்கி வருகின்றன. 3, 4ஆவது உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. 5, 6ஆம் உலைகளுக்கான எழுத்துப்பூர்வமான தொடக்கப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், எண்ணூர் துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் வெளியேறியதால், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்த கலக்கத்தையும் பல்வேறு மட்டங்களில் எழுப்பியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சுனாமி பேரலைகளை உருவாக்கும் வகையிலான கடலடிப் பிளவு, அந்தமான்-நிகோபர்-சுமத்ரா பகுதியாக உள்ளது. இது கூடங்குளத்தில் இருந்து 1,500 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சுனாமி தாக்கம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு கூடங்குளத்தில் கடல் மட்டத்தில் இருந்து 5.44 மீட்டர் உயரம் வரை இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2004இல் டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி பேரலை எழுந்தபோது, கூடங்குளத்தில் கடல்மட்டத்திலிருந்து 2.8 மீட்டர் உயரத்துக்கு மட்டுமே பாதிப்பை உணர முடிந்தது. ஆனால், கூடங்குளம் அணு உலைகள், ஏற்கெனவே அபாயம் என உணர்ந்துள்ள 5.44 மீட்டர் என்ற அளவைவிட 8.7 மீட்டர் வரையிலான உயரத்தில் உள்ளன. இதனால், சுனாமியே வந்தாலும் பாதிப்பு வராது என்கிறது கூடங்குளம் அணு உலை நிர்வாகம். மேலும், புகுஷிமாவில் ஏற்பட்ட அழிவின்போது அவசரகால டீசல் ஜெனரேட்டர்களை சுனாமி மூழ்கடித்தது. இதனால், ஹைட்ரஜன் மறு இணைப்பான்கள் இயங்காமல், அவை வெடித்து ஹைட்ரஜன் வெளியேறி பெரிதும் அழிவை சந்திக்க நேரிட்டது.
ஆனால், கூடங்குளத்தில் உள்ள டீசல் ஜெனரேட்டர்கள் கடல் மட்டத்தில் இருந்து 9.3 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும், ஹைட்ரஜன் மறு இணைப்பான்கள் ஜெனரேட்டரில் இயங்காமல் இயல்பு நிலையிலேயே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கு எந்தவித மின்சாரமும் தேவையில்லை. எனவே, அனைத்து நிலைகளிலும் கூடங்குளம் பாதுகாப்பானது என்கிறது உலை நிர்வாகம்.

இது தொடர்பாக, கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியது:

கூடங்குளத்தில் சுனாமி ஏற்பட்டால் அதிகபட்ச வெள்ள அளவு என்பது கடல் மட்டத்தில் இருந்து 5.44 மீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாதுகாப்பு எல்லைக்கும் மேலே கூடுதலாக 2 மீட்டர் இடைவெளி அமைத்து நிலையத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கடல் மட்டத்திலிருந்து 7.44 மீட்டர் என வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, கூடங்குளத்தின் பம்ப் ஹவுஸ் 7.65 மீட்டர் உயரத்திலும், டர்பைன் 8.1 மீட்டர் உயரத்திலும், அணு உலைகள் 8.7 மீட்டர் உயரத்திலும், டீசல் ஜெனரேட்டர்கள் 9.3 மீட்டர் உயரத்திலும், சுவிட்ச் யார்டு 13 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.

இதனால், அணு உலையின் குளிர்விப்பைத் தடையின்றித் தொடர முடியும். ஏதாவது கோளாறு காரணமாக அனைத்து வகை மின் விநியோகமும் இழந்தாலும், கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ள இயல்பு நிலை குளிர்விப்பான் ( PHRS ) மூலம் உலையை குளிர்விக்கச் செய்து அணுக் கசிவு ஏற்படாமல் பாதுகாக்க முடியும். இந்த குளிர்விப்பான் இயக்கமானது வெப்ப;க் சலன முறையில் இயங்குகிறது. இதற்கு எந்தவித மின்சாரமும் தேவையில்லை. நீராவி உற்பத்திக் கலனின் இரண்டாம் சுற்றில் நிரம்பியுள்ள நீரானது அணு உலையின் வெப்பத்தை பெற்று நீராவியாக மாறுகிறது. பின்னர், இந்த நீராவியானது வளிமண்டலக் காற்றைப் பெற்று இயல்பு நிலை குளிர்விப்பானாக செயல்படுகிறது. இந்த அமைப்பானது 160 அடி உயரத்தில் உள்ளது. தொடர்ந்து இயங்கும். கற்பனைப் புனைவாகக் கூறப்படும் அணு எரிபொருள் உருகும் நிலை ஏற்பட்டால்கூட, உருகிய அணு எரிபொருள் அணு உலைக்கு கீழே அமைந்துள்ள உள்வாங்கும் கலனில் ( Core Catcher ) நிறுத்தப்பட்டு குளிர்விக்கப்படும். இந்த அமைப்பானது எதிர்பாராத நிகழ்வின்போது ஏற்படும் அதிகபட்ச அழுத்தத்தை தாங்கும் வகையில் காற்றுப் புகாத கான்கிரீட் கட்டடத்தால் உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. புகுஷிமாவில் இத்தகைய அம்சங்கள் இல்லாததாலேயே பெரும் அழிவை சந்திக்க நேரிட்டது. இதுமட்டுமல்லாது, அணு உலையின் செயல்பாட்டு நிறுத்தம் (Shutdown of Reactor), அணு உலையை குளிர்வித்தல் ( Cooling of Reactor ), கசிவை உள்ளடக்கி அது எந்த வகையிலும் பரவாதவாறு தடுத்தல் ( Confinement of Radioactivity) ஆகிய 3 முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், அவசரகால நீர் கொள்கலன்களும் உள்ளன. எனவே, சுனாமியையும் கூடங்குளம் அணு உலை எதிர்கொள்ளும் என்றார் ஆர்.எஸ். சுந்தர்.
-ஆர். முருகன்

பல ஆயிரம் கோடிக்கு டீசல் கொள்முதல் ஏன்?

கூடங்குளம் முதல் இரு உலைகளும் தரமற்றவை, ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்யப்படும் டீசல் மூலமே உலை இயக்கப்படுவதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரனின் குற்றச்சாட்டையும், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக, வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியது:
முதல் இரு உலைகளயும் பாதுகாக்க தலா 4 டீசல் ஜெனரேட்டர்கள் உள்ளன. இவை மட்டுமல்லாது மேலும் 2 ஜெனரேட்டர்கள் உள்ளன. இவை அனைத்தும் தலா 6 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. இவற்றை இயக்கி 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வது இயலாத காரியம். இந்த ஜெனரேட்டர்களுக்கு ஆண்டுதோறும் பல கோடி மதிப்பில் டீசல் வாங்குவது உண்மை. அவற்றை வெளிப்படையாக இணையத்தில் வெளியிடுகிறோம். உலைகளில் தொடர்வினை இல்லாதபோது உலைகளை குளிர்நிலையில் வைத்திருக்க இந்த ஜெனரேட்டர்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு டீசல் கொள்முதல் செய்வது அவசியமானது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கூறும் அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகளே என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com