சொகுசுப் பேருந்து மோதி 3 பேர் சாவு; 39 பேர் காயம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சனிக்கிழமை நள்ளிரவு டிராக்டர், அரசுப் பேருந்து மீது சொகுசுப்பேருந்து மோதியதில் மூவர் இறந்தனர், 39 பேர் காயமடைந்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சனிக்கிழமை நள்ளிரவு டிராக்டர், அரசுப் பேருந்து மீது சொகுசுப்பேருந்து மோதியதில் மூவர் இறந்தனர், 39 பேர் காயமடைந்தனர்.
குளித்தலையை அடுத்த திம்மம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(45). பெட்டவாய்த்தலையில் தனது தோட்டத்தில் உள்ள வாழை மரங்களைத் தாங்கிப்பிடிக்க குளித்தலை கணக்குப்பிள்ளையூரைச் சேர்ந்த பெரியசாமியுடன் (56) சேர்ந்து சவுக்கு மரங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு திம்மம்பட்டி நோக்கி சனிக்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தார்.
குளித்தலை அருகே குமாரமங்கலம் தண்ணீர்ப்பந்தல் பிரிவு பகுதியில் வந்தபோது, பின்னால் திருச்சியில் இருந்து குளித்தலை, முசிறி வழியாக பெங்களூர் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து திடீரென நிலைதடுமாறி டிராக்டர் மீதும், எதிரே திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து மீதும் மோதியது.
இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த பெரியசாமி, அரசுப் பேருந்தில் இருந்த குளித்தலை வளையப்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி தனலட்சுமி (36), சொகுசுப்பேருந்தின் மாற்று ஓட்டுநரான திருச்சி அரியாவூரைச் சேர்ந்த சிவசந்திரன் மகன் பார்த்தீபன் (29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரு பேருந்துகளிலும் இருந்த பெங்களூரைச் சேர்ந்த தனபால் மனைவி கனகவள்ளி, பிரகாஷ் மனைவி ஹேமா (21), திருவாரூரைச் சேர்ந்த புருசோத்தமன், மணப்பாறையைச் சேர்ந்த பழனிசாமி (30), தஞ்சையைச் சேர்ந்த சரவணன் மனைவி சித்ரா (24), அரியலூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (37) உள்ளிட்ட 39 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த கரூர், குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளில் சிக்கியோரை மீட்டு திருச்சி,குளித்தலை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com