தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை: நடிகர் ஆனந்த் ராஜ்

அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத்
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை: நடிகர் ஆனந்த் ராஜ்

சென்னை: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருப்பது குறித்து தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேறிய நடிகர் ஆனந்த் ராஜ், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பன்னீசெல்வம் தலைமையில் நல்ல ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தற்போது எடுத்துள்ள இந்த முடிவு எதற்கு என்று தெரியவில்லை. எதற்காக இந்த அவசரம் என்றும் புரியவில்லை. யாருக்காக இந்த அவசரம் என்பது மக்களுக்கு புரியவில்லை.

காலாண்டு பரிட்சை எழுதிய பள்ளி மாணவர்களிடம் தமிழகத்தின் முதல்வர் யார் என்றால் 'அம்மா' என்று சொல்லி இருப்பார்கள். அரையாண்டு பரிட்சை எழுதிய மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டால் ஓபிஎஸ் என்று சொல்லி இருப்பார்கள். முழு ஆண்டு பரிட்சையில் தமிழக முதல்வர் யார் என்றால் இனிதான் மாணவர்கள் படிக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் யாரும் அரசியலுக்கு வரலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. ஆனால், முதல்வர் பொறுப்பு மக்கள் தரும் பொறுப்பு. அந்த உரிமை மக்களுக்கே உள்ளது. அதனை நிதானமாக சிந்தித்து செயல்படுவது அவசியம். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்று அம்மாவின் ஆன்மா சென்னை கடற்கரையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து சென்னை கடற்கரைக்கு சோதனை வந்துகொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, அம்மா நமக்காக ஏதோ சொல்ல வருவதுபோல் தெரிகிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்து ஒருவரை முதல்வராக கொண்டு வந்தால் அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ளலாம். அதுபோன்று மறுதேர்தல் வந்து அதில் சசிகலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னுடைய முதல்வரும் சசிகலாதான்.

சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் வந்து சசிகலா தண்டிக்கப்படும் போது, மீண்டும் ஓபிஎஸ்தான் முதல்வராக பதவியேற்பார்.

தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை மத்திய அரசு மிக கவனமாக கவனிக்கும் என்று நினைக்கிறேன். ஆளுநர், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியின் செயல் தலைவராக உள்ள ஸ்டாலின் இதனை நல்ல முறையில் கையாள வேண்டும் என்றும் விரும்புகிறேன் என்று ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com