தேர்தலில் நின்றால் சசிகலா டெபாசிட் பெறமாட்டார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்வு ஆனதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலில் நின்றால் சசிகலா டெபாசிட் பெறமாட்டார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்வு ஆனதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நோய்வாய்ப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இரவோடு இரவாக பன்னீர்செல்வம்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவுக்கு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பிலும் எந்த ஒரு பதவியையும் கொடுக்கவில்லை. கட்சியிலும் எந்த ஒரு பொறுப்பையும் வழங்கவில்லை. ஜெயலலிதா உயிரிழந்து 30 நாட்கள் முடியும் முன்பாகவே அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலா, அடுத்த கட்டமாக முதல்வர் பதவியில் அமருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.
இதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். ஆனால், இந்த கூட்டத்தில் கட்சியின் பேரவை உறுப்பினர்களின் தொகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக கூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுக்கும் கூட்டமாக மாறிவிட்டது.
அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி அல்லது நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்வு ஆனதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தமிழகத்தில் முதல்வராக சசிகலாவை பொதுமக்கள் ஒரு போதும் ஏற்று கொள்ளமாட்டார்கள். சசிகலா தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர்: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிமுக கட்சியின் உள்கட்சி விவகாரம். எனவே, இது குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள சசிகலாவுக்கு வாழ்த்துகள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஜி. ராமகிருஷ்ணன்: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள வி.கே.சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் உள்ள கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் செயல்படுவார் என நம்புகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com