நிழல் நிஜமாகிறது...!!

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என திரைத்துறையும், மிகப்பெரிய அரசியல் ஈர்ப்பும் கொண்ட தலைவர்களின் வரிசையில் தலைமைச் செயலகத்துக்குள், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண் காலடி எடுத்து வைக்கப் போகிறார்.
நிழல் நிஜமாகிறது...!!

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என திரைத்துறையும், மிகப்பெரிய அரசியல் ஈர்ப்பும் கொண்ட தலைவர்களின் வரிசையில் தலைமைச் செயலகத்துக்குள், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண் காலடி எடுத்து வைக்கப் போகிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த வி.கே. சசிகலா, மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த எம். நடராஜனை மணந்தார். 1980-களில், சசிகலா ஒரு விடியோ கேசட் கடையை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவருக்கு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது.
இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா கலந்து கொண்ட அதிமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை விடியோ பதிவு செய்யும் வேலையையும் மேற்கொண்டார். இது நட்பாக மாறியது. பின்னர் இருவரும் தோழிகள் ஆகினர்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. ஜெயலலிதா பிரிவு என்ற அணியை ஜெயலலிதா தலைமை தாங்கி வந்தார். அப்போது, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா குடியேறினார். இதன்பின், அதிமுக ஒன்றாக இணைந்ததும், கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.
புகார்கள்-குற்றச்சாட்டுகள்: தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன், தினகரன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இப்போது வரை நடைபெற்று வருகிறது. இதைத் தவிர்த்து டான்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டாலும் அவற்றில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டனர்.
நீக்கம்-சேர்ப்பு: கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை மற்றும் நாடளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படவில்லை.
கடந்த 2011 டிசம்பரில், யாரும் எதிர்பாராத வகையில், சசிகலா உள்பட பத்துக்கும் மேற்பட்ட அவரது குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். போயஸ் தோட்ட இல்லத்திலிருந்தும் சசிகலாவை வெளியேற்றினார்.
மூன்று மாதங்களுக்கு பின்னர், சசிகலா வெளியிட்ட அறிக்கையில், "தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதனை ஏற்றுக் கொண்டு மீண்டும் சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். இதன்பின், போயஸ் தோட்ட இல்லத்திலேயே சசிகலா இருந்து வந்தார்.
அப்பல்லோவில் அனுமதி: ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரங்கள், சுற்றுப் பயணங்கள் என அனைத்திலும் அவருடன் நிழலாக இருந்து வந்தார் சசிகலா. கடந்த ஆண்டு செப்டம்பரில் திடீரென உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.
அப்போது, மருத்துவமனையில் அவருடனேயே இருந்து கவனித்துக் கொண்டார். உடல் நலம் தேறி வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மறைந்தார். 32 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இணைந்திருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார் சசிகலா. ஜெயலலிதாவின் இழப்பு ஒருபுறம் இருக்க, அதைத் தொடர்ந்து கட்சியிலோ, ஆட்சியிலோ எந்தப் பிளவும் வந்து விடக் கூடாது என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். ஜெயலலிதா மறைந்த தினத்தில் இருந்தே அதிமுக அரசிலும், கட்சியிலும் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அவர் மிகவும் உன்னிப்பாகவும், கவனமாகவும் மேற்கொண்டார்.
கட்சி-ஆட்சிப் பொறுப்புகள்: கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின், இப்போது சட்டப் பேரவை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மிகப்பெரிய அரசியல் பதவிகள், ஆட்சிப் பொறுப்புகள் ஏதும் இல்லாமல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த சசிகலா, கோட்டைக்குள் அடியெடுத்து வைக்கும் முதல் சாதாரண குடும்பப் பெண்மணியாக உள்ளார்.


3-வது பெண் முதல்வர்: மூவரும் அதிமுகவே!

தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வராக வி.கே.சசிகலா பொறுப்பேற்கவுள்ளார். அதிமுகவில் இருந்தே இந்த மூவரும் தேர்வாகியுள்ளனர்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், அவரது மனைவி வி.என்.ஜானகி முதல்வராகப் பொறுப்பேற்று சில வாரங்கள் பதவியில் இருந்தார். இதைத் தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். இதையடுத்து, 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று, 6 முறை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
அவர்களது வரிசையில் இப்போது வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த மூன்று பெண் முதல்வர்களையும் உருவாக்கிய பெருமை அதிமுக என்ற கட்சியைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆளுநர் இன்று தமிழகம் வருகை

தில்லிக்கு சென்றுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை மாலை தமிழகம் திரும்புகிறார். கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் செல்லவுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் சென்னையிலேயே இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் கோவை செல்வாரா அல்லது சென்னையிலேயே தங்கியிருப்பாரா என்பது திங்கள்கிழமை மாலையில்தான் தெரியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வது, வி.கே.சசிகலாவை தேர்வு செய்ததற்கான கடிதத்தை ஏற்று அவரது தலைமையில் புதிய அமைச்சரவையை அமைக்க அழைப்பது போன்ற சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதற்காக, ஆளுநர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com