முதல்வராகிறார் வி.கே.சசிகலா: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாகத் தேர்வு

அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல்வராகிறார் வி.கே.சசிகலா: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாகத் தேர்வு

அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராகிறார். அநேகமாக அவர் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.7ஆம் தேதி) முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் பெயரை முதல்வரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் அதை வழிமொழிந்தனர். இதைத் தொடர்ந்து கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக வி.கே.சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை கேட்டவுடன் வி.கே.சசிகலா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவரை பன்னீர் செல்வம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் முதல்வர் பதவியையும் ஏற்குமாறு தம்மை பன்னீர் செல்வம் வற்புறுத்தி வந்ததாகவும் சசிகலா குறிப்பிட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பிளவுபட்டுவிடும் என்று அரசியல் எதிரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களின் கனவு இப்போது கலைந்துவிட்டது என்றார்.
போயஸ் தோட்டத்தில் ஆலோசனை: அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறுவதற்கு முன்பாக, போயஸ் தோட்டத்தில் நண்பகலில் திடீரென ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சசிகலாவை முதல்வராகத் தேர்வு செய்வது தொடர்பாகவும், அமைச்சரவை அமைப்பது உள்ளிட்டவை விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்த ஆலோசனைக்குப் பிறகு சட்டப் பேரவை உறுப்பினர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி சசிகலாவை சட்டப் பேரவை கட்சித் தலைவராகத் தேர்வு செய்தனர்.
பதவியேற்பு எப்போது?: தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி நடைபெறும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு முன்னதாக 7-ஆம் தேதியே அவர் முதல்வராகப் பதவியேற்கக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தில்லியிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் பதவியேற்பு விழா முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த சில முக்கியத் திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் கையெழுத்திடுவார். பெண்களைக் கவரும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்யப்பட்டு கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் மாற்றம்: மறைந்த ஜெயலலிதா, முதல்வராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டிருந்த அமைச்சரவையே, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போதும் தொடர்ந்தது. எந்த அமைச்சரும் மாற்றப்படவில்லை. இந்த நிலையில், வி.கே.சசிகலா தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் சில மூத்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சசிகலா, சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து ஆறு மாத காலத்துக்குள் அவர் தமிழக சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, போட்டியிட்டு வென்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இப்போது காலியாக உள்ளது. அந்தத் தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு அவர் போட்டியிடுவாரா என்பது பின்னர் தெரியவரும்.


அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு

அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் எனகொறடா மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தில்லியில் இருக்கிறார். முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதில் சில நடைமுறைகள் இருக்கின்றன.
ஆளுநர் தமிழகத்தில் இல்லாத சூழ்நிலையில் அந்த நடைமுறைகளைத் தொடங்க முடியாது. எனவே, அவர் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கோ, தொகுதிகளுக்கோ உடனடியாகச் செல்ல வேண்டாம் என அரசு கொறடா ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com