ரூபெல்லா தடுப்பூசி அச்சத்தை போக்க மகள்களை அழைத்து வந்து தடுப்பூசி போட்ட திருவாரூர் ஆட்சியர்!

ரூபெல்லா தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் விதமாக, திருவாரூர் ஆட்சியர் தனது மகள்களை
ரூபெல்லா தடுப்பூசி அச்சத்தை போக்க மகள்களை அழைத்து வந்து தடுப்பூசி போட்ட திருவாரூர் ஆட்சியர்!

திருவாரூர்: ரூபெல்லா தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் விதமாக, திருவாரூர் ஆட்சியர் தனது மகள்களை முகாமிற்கு அழைத்து வந்து தடுப்பூசி போட்டு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை போக்கியது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இன்று திங்கள்கிழமை (பிப். 6) முதல் ரூபல்லா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பால்வாடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

பிறந்த 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளில் இருந்து 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 1.8 கோடி குழந்தைகளுக்கு ரூபல்லா தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை பெருவிரலில் அடையாளத்துக்காக மை வைக்கப்படும்.

முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பின்பு வழக்கமான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இது சேர்க்கப்படும்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் என 12 ஆயிரம் பேர் தடுப்பூசி வழங்க உள்ளனர்.

ரூபல்லா தடுப்பூசி போட்ட ஒரு வாரத்துக்குப் பின்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல், ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். வழக்கமாக தடுப்பூசிகளால் ஏற்படும் விளைவுகள் தான் இவை. இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். ரூபல்லா தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய இரண்டு நோய்களிலிருந்தும் குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கலாம்.

மேலும், முதன்முறையாக இந்தத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதால், இது குறித்த தகவல் குறிப்பேடு பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரூபெல்லா தடுப்பூசி குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதனால் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு பெற்றோர்களிடம் தயக்கம் நிலவுகிறது.

இதையடுத்து ரூபெல்லா தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் களையும் விதமாக, திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ், தனது மகள்களை தடுப்பூசி முகாமிற்கு அழைத்து வந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில், இன்று தொடங்கிய தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தொடக்கி வைத்தார். பின்னர்,
ஆட்சியரின் மகளான, ஹர்சினி மற்றும் ஜோதிகா ஆகியோருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.

செய்தியாளர்களிடம் கூறுகையில், ரூபெல்லா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய இரண்டு நோய்களிலிருந்தும், வாழ்நாள் முழுவதும் குழந்தைகளை பாதுகாக்கலாம் என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com