வறண்டன அணைகள்; குடிநீர் தட்டுப்பாடு அபாயம் என்ன செய்யப் போகிறது அரசு?

மழை பொய்த்துப் போனதால், தற்போது தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வறண்டு விட்டன.
வறண்டன அணைகள்; குடிநீர் தட்டுப்பாடு அபாயம் என்ன செய்யப் போகிறது அரசு?

மழை பொய்த்துப் போனதால், தற்போது தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வறண்டு விட்டன. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. வழக்கமாக குடிநீர் கோரி ஏப்ரல், மே மாதங்களில் நிகழும் போராட்டங்கள் கடந்த ஆண்டு முற்றிலுமாக மழை பொய்த்துப் போனதால், நிகழாண்டில் ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. கோடை காலம் முடிய இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குறைந்து வரும் தண்ணீர்

சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் குடிநீர்த் தேவையை மேட்டூர் அணைதான் பூர்த்தி செய்து வருகிறது. மேட்டூர் அணையை நம்பி 127 குடிநீர்த் திட்டங்கள் 10 மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்தக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் தினமும் 1,050 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணையில் தற்போது 35 அடிக்கும் குறைவான தண்ணீரே உள்ளது.
இந்தக் குறைந்த அளவு தண்ணீரை வைத்து 80 நாள்களுக்கு 10 மாவட்டங்களிலும் குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். கடுமையான வெயில் ஏற்படுமாயின், 80 நாள்கள் என்பது சற்றுக் குறையும் அபாயமும் உள்ளது.
வைகை அணையில் 4 சதவீத தண்ணீரே தற்போது இருப்பு உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு 10 நாள்களுக்குத் தேவையான குடிநீரை மட்டுமே விநியோகம் செய்ய இயலும். இதனால் வைகை அணையை மட்டும் நம்பியுள்ள தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் கடும் குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும்.
அடுத்தபடியாக, வற்றாத ஜீவநதியாகக் கருதப்படும் தாமிரபரணியே, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால், பாபநாசம் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 40 நாள்களுக்கே போதுமானதாக உள்ளது. அதுபோல, மணிமுத்தாற்றில் உள்ள தண்ணீரும் 40 நாள் குடிநீர்த் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் அளவில் உள்ளது. இன்னும் 40 நாள்களுக்குப் பிறகு தாமிரபரணியை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.
இதுபோல், கோவை மக்களின் தாகத்தைத் தீர்க்கும் சிறுவாணி அணையில் இன்னும் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீரே இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோல் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு குடிநீர்த் தேவையைத் தீர்த்துவரும் சாத்தனூர் அணையில் தற்போது 36 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்தத் தண்ணீரை வைத்து இன்னும் 15 நாள்களுக்கு மட்டுமே அப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.
அதேபோன்று, முல்லைப் பெரியாறு அணை ஒரு மாத குடிநீர்த் தேவையையும், அமராவதி அணை இன்னும் 2 மாதங்களுக்கும் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க உதவும். பிப்ரவரி மாதத்தில் இந்த அணைகளும் குடிநீர் தேவைக்குக் கைகொடுக்காது.
தமிழகத்தின் முக்கிய அணைகளில் தண்ணீர் குறைந்துவரும் நிலையில், தலைநகரான சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, வீராணம் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த ஏரிகளில் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீரே உள்ளது என்பதோடு, சென்னை மக்கள் இன்னும் சில நாள்களில் மிகப் பெரிய தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

கை கொடுக்காத பருவ மழை

கடந்த ஆண்டு பருவ மழை குறைந்த அளவே பெய்த காரணத்தினாலும், தமிழகத்துக்கு அதிக மழையைப் பெற்றுத் தரும் வட கிழக்குப் பருவமழை 63 சதவீதம் குறைவாகவே பெய்ததினாலும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.
பருவமழை கை கொடுக்காததால், தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வறட்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

குடிநீர் விநியோகத்தை குறைக்கத் திட்டம்

தமிழகத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என மொத்தம் உள்ள 46,438 உள்ளாட்சி அமைப்புகளில் 83 சதவீதமாகத் தண்ணீர் விநியோகம் குறையும் நிலை ஏற்படும். அத்துடன், மேலும் குறைத்து 60 சதவீதமாக தண்ணீர் விநியோகத்தை மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி 528 பேரூராட்சிகளில் பிப்ரவரி மாதம் இறுதி வரை குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் ஏற்படாது என்ற நிலை இருந்தாலும், 350 பேரூராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதுபோல், தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் ஏறத்தாழ 60 சதவீத கிராமங்கள் நிலத்தடி நீர் ஆதாரத்தையே குடிநீர்த் தேவைக்கு நம்பியுள்ளன. இந்தக் கிராமங்களில் ஜனவரி மாதம் முதல் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் நிச்சயம் இன்னும் சில மாதங்களில் தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சமானது தலைவிரித்தாட உள்ளது. இதை எதிர்கொள்ள அரசு என்ன செய்யப் போகிறது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அனைத்து வழிகளிலும் முயற்சி

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அனைத்து வழிகளிலும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு வறட்சிக் காலத்திலும் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்குத் தேவையான நீர் ஆதாரங்கள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளன. இருப்பினும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊரகப் பகுதிகளைப் பொருத்தவரை, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படாத கிராம ஊராட்சிகள் அனைத்திலும் 50 முதல் 80 சதவீதம் வரை குடிநீர் பிரச்னை உள்ளது. இதனால், நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, தேவைப்பட்டால் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்னும் 5 மாதங்களுக்கு ஊராட்சிகள் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி இந்த மாதத்திலேயே தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com