சுந்தரம் பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை வாரிசுகளுக்கு மீட்டுத் தரவேண்டும்: வைகோ

தமிழறிஞர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட நிலம், ஹார்வின் மாளிகையையும் அவருடைய வாரிசுகளுக்கு கேரள அரசு மீட்டுத் தரவேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழறிஞர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட நிலம், ஹார்வின் மாளிகையையும் அவருடைய வாரிசுகளுக்கு கேரள அரசு மீட்டுத் தரவேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரத்தில் சைவப் பிரகாச சபையை நிறுவிய தமிழறிஞர் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, சுவாமி விவேகானந்தருக்கு சைவம் கற்பித்தவர்.
இவரின் பெருமையைப் பாராட்டி, 1892-இல் அன்றைய திருவிதாங்கூர் அரசு, அதன் தலைநகரான திருவனந்தபுரத்தில் 90 ஏக்கர் மனை நிலத்தை வழங்கியது. அதன் ஒரு பகுதியில் பெரிய மாளிகையை சுந்தரம் பிள்ளை கட்டி, தான் மதித்த பேராசிரியர் ஹார்வேயின் பெயரைச் சூட்டினார்.
சுந்தரம் பிள்ளையின் ஒரே மகன் நடராச பிள்ளைதான் அந்த மாளிகைக்கு ஒரே வாரிசு. திருவிதாங்கூர் சட்டப் பேரவையில் 6 முறை உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், கேரள மாநிலக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பணிபுரிந்தவர்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான திவானுக்கு எதிராக, 1916-இல் போராட்டம் நடத்திய காரணத்தால், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு அளிக்கப்பட்ட 90 ஏக்கர் நிலத்தையும், மானியத்தையும் திவான் அரசு பறித்துக் கொண்டது. நடராச பிள்ளையைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
நடராச பிள்ளை மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தார் ஹார்வே மாளிகையைத் திரும்ப அளிக்குமாறு அளித்த கோரிக்கையை 1968-இல் கேரள முதல்வர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஏற்றார். ஆனால், இன்றுவரை திரும்பக் கொடுக்கப்படவில்லை.
சுந்தரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களைத் தனியார் சட்டக் கல்லூரிக்கு கேரள அரசு குத்தகைக்கு விட்டது. முதல்வராக கருணாகரன் இருந்தபோது, அந்த நிலத்தை நாராயணன் நாயர் என்பவருக்குப் பட்டா மாற்றிக் கொடுத்து விட்டனர்.
எனவே, தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று, சுந்தரம்பிள்ளைக்கு வழங்கப்பட்ட 90 ஏக்கர் நிலம், ஹார்வின் மாளிகை ஆகியவற்றை மீட்டு அவரது வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com