ஜெயலலிதா தயிர் சாதம் சாப்பிட்டது உண்மை: ரிச்சர்டு பீலே விளக்கம்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று உணவு சாப்பிட்டார். ஆம், இல்லை என்று பதில் அளித்ததாக லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே கூறினார்.
ஜெயலலிதா தயிர் சாதம் சாப்பிட்டது உண்மை: ரிச்சர்டு பீலே விளக்கம்

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று உணவு சாப்பிட்டார். ஆம், இல்லை என்று பதில் அளித்ததாக லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே கூறினார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே, அப்பல்லோ மருத்துவர் பாபு ஆபிரஹாம், சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பாளராக தமிழக அரசின் சார்பில் செயல்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பாலாஜி, ஜெயலலிதா இறந்த பின்னர் உடலை பதப்படுத்தும் மருத்துவ நடைமுறையை மேற்கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறுஇயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் ஆகியோர் சென்னையில் திங்கள்கிழமை கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது:
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை. அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

பல்வேறு வதந்திகள் நிலவி வரும் நிலையில், சிகிச்சை தொடர்பான விவரங்களைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்ததன் காரணமாக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் அழுத்தம் காரணம் இல்லை.

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில், மயக்கத்துடன் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், பாக்டீரியா தொற்றின் காரணமாக ரத்தத்தில் நச்சேற்றம் ("செப்ஸிஸ்') இருப்பது கண்டறியப்பட்டது. சர்க்கரை நோய் (அதிக ரத்த சர்க்கரை அளவு), உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் ரத்தத்தில் காணப்பட்ட நச்சானது வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு இருந்தது.

10 நாள்கள் தூக்கத்துக்கான மருந்துகள்: அவருக்கு சுவாசத்தைச் சீராக்கும் அறுவைச் சிகிச்சை ("டிரக்ஸ்யாஸ்டமி') செய்யப்பட்டு, கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டது. பல்வேறு வலி மிகுந்த சிகிச்சைகள், மருத்துவ செயல்முறைகள் காரணமாக அவருக்கு 10 நாள்கள் தூக்கத்துக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பின்பு அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தயிர் சாதம் சாப்பிட்டார்: உடலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அவர் படுக்கையிலிருந்து எழுந்தார். மருத்துவர்களின் கேள்விகளுக்கு "ஆம்', "இல்லை' என்று பதில் அளிக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தயிர் சாதம் போன்ற உணவுகளை உட்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இயன்முறை மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரவு உறங்கும் சமயத்தில் மட்டுமே வென்டிலேட்டர் கருவியின் உதவி தேவைப்பட்டது. மற்ற நேரங்களில் அவர் தாமாகவே சுவாசித்தார்.

ஆளுநருக்கு "தம்ப்ஸ் அப்': ஆளுநர் (பொறுப்பு) சி.எச்.வித்யா சாகர் ராவ் 2 முறை மருத்துவமனைக்கு வந்தார். இரண்டாவது முறை சிகிச்சை அறையில் சென்று ஆளுநர் பார்த்தார். அப்போது அவருக்கு "தம்ப்ஸ் அப்' தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

திடீர் பின்னடைவு ஏன்? அவருக்கு அளித்த சிகிச்சையின்பயனாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி மாலையில் இயன்முறை சிகிச்சை முடிந்த பின்பு ஜெயலலிதா சோர்வாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத நிலையில், டாக்டர் ரமேஷ், மருத்துவக் குழுவினர் அறையில் இருந்தபோது அவர்கள் முன்னிலையிலேயே ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com