மனை விற்பனை ஒழுங்குமுறை சட்டம்: தயார்நிலையில் வரைவு அறிக்கை

மனை விற்பனை சட்ட வரைவு அறிக்கை தயார்நிலையில் உள்ளதால், இதற்கான சட்டம் விரைவில் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனை விற்பனை சட்ட வரைவு அறிக்கை தயார்நிலையில் உள்ளதால், இதற்கான சட்டம் விரைவில் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடு விற்பனை, வாங்குதலில் உள்ள முறைகேடுகளை தடுக்க, மனை விற்பனை ஒழுங்குமுறை சட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசங்களில் கடந்த ஆண்டு நவம்பரில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்த காலஅவகாசம் தரப்பட்டது. அதன்படி, மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை காலஅவகாசம் அளித்தது.
காலதாமதம் ஏன்? ஆனால், முதல்வர் ஜெயலலிதா மறைவு, வர்தா புயல், ஜல்லிக்கட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை அமல் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், இந்தச் சட்ட விதிமுறைகளில் சில முரண்பாடான விஷயங்கள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கோரியிருந்தது. இதன்காரணமாக, இந்த சட்டம் அமல்படுத்துவதில் தொடர்ந்து காலதாமதமானது.
இதுகுறித்து வீட்டுவசதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
மனை விற்பனை வணிக ஒழுங்குமுறை சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதற்காக, அரசு வரைவு அறிக்கை தயார்நிலையில் உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அரசிதழில் வெளியாகலாம். அதன்படி, சட்டப்பேரவை கூட்டத்தில் ஓரிரு மாதங்களுக்குள் இதற்கான அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என்றன.
இதுகுறித்து கட்டுமான நிபுணர்கள் கூறியதாவது: மனை விற்பனை ஒழுங்குமுறை சட்டம் விற்பனையாளர்களுக்கும் சாதகமாகவும், வெளிப்படையான அணுகுமுறைகளை கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதா? வாடிக்கையாளர்கள் வீடு வாங்கும் விஷயத்தில், கட்டுமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை மீறி தாமதபடுத்தும் காலத்துக்கு ஏற்றவாறு 12 சதவீத வட்டியை வாடிக்கையாளர்களுக்கும் தரவேண்டும். அதுபோல், வீடுவாங்குவதற்கு விற்பனையாளர்களிடம் 30 சதவீத தொகையை தவிர, மீதமுள்ள 70 சதவிகிதத்தை தனி வங்கிக் கணக்கில் பராமரிப்பதும் கட்டாயக்கப்பட்டுள்ளது. இதனால், விற்பனையாளர் ஒருவரிடம் பணம் பெற்று வேறு கட்டுமான திட்டத்தில் அதை செலவிடுவது தடுக்கப்படும் வகையில் இந்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் வெளிப்படை தன்மையாக உள்ளதால், இந்த சட்டம் பாதுகாப்பானது. இந்த சட்டத்தை விரைந்து தமிழக அரசு அமல்படுத்தினால் வீடு வாங்குவோர் பயன்பெற ஏதுவாக அமையும் என்றனர்.

விதிமீறுவோருக்கு சிறை!

மனை விற்பனை வணிகச் சட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, வீடு விற்பவர்கள், வாங்குவோர் உள்ளிட்டோர் ஆதார், பான் அட்டை எண்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனால், பத்திரப்பதிவு, பட்டா உள்ளிட்டவற்றில் மோசடிகள் கட்டுப்படுத்தப்படும். அதுபோல், விதிமீறலில் ஈடுபடும் கட்டுமான உரிமையாளர்கள், முகவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்.
மேலும், மனை விற்பனை வணிகத்தை முறைப்படுத்த புதியதாக ஆணையம் ஏற்படுத்துதல், அனைத்து கட்டுமான திட்டங்களையும் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விதிகள் வாடிக்கையாளர்களின் நலனை மையமாகக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com