மும்பையில் இருக்கிறார் ஆளுநர்: தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பு எப்போது?

தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருக்கிறார்.
மும்பையில் இருக்கிறார் ஆளுநர்: தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பு எப்போது?


சென்னை: தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருக்கிறார்.

தற்போதைக்கு அவர் சென்னை திரும்ப மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டப அரங்கம் தயாராகி வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக அரசின் பொதுத் துறை உயரதிகாரிகள் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்.

தில்லி சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை (பிப்.6) இரவு மும்பை சென்று விட்டார். இதையடுத்து சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே, பதவியேற்பு விழா குறித்து வி.கே. சசிகலாவுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் திங்கள்கிழமை காலை ஆலோசனை நடத்தினர்.

ஆளும் அதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்த ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பதவியேற்பு எப்போது? தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவர் எந்தத் தேதியில் பதவியேற்பார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும், அவரது வசதியைப் பொருத்து பதவியேற்பு விழா தேதி, நேரம் முடிவு செய்யப்பட்டு உடனடியாக நடத்தப்படும். ஆளுநர் சென்னை திரும்பியதும் தனது தலைமையில் அமைச்சரவையை அமைக்க வி.கே.சசிகலா உரிமை கோருவார். மேலும், 134 சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் சசிகலா அளிப்பார்.

எந்த நேரத்திலும்...: இதைத் தொடர்ந்து சசிகலா தலைமையில் புதிய அமைச்சரவையை அமைக்க ஆளுநர் ஒப்புதல் அளிப்பார். பதவியேற்பு விழாவை, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பதவியேற்பு விழாவை நடத்தும் வகையில் முழுவீச்சில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அழைப்பிதழ் தயார்: எனினும் பதவியேற்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. அழைப்பிதழ் தயாராக இருப்பதாகவும் அதில் தேதி, நேரம் மட்டும் காலியாக விடப்பட்டிருப்பதாகவும் பொதுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com