வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்

தமிழக விவசாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்; இல்லையெனில், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தமிழக விவசாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்; இல்லையெனில், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
முன்பு அதிக மழை பெய்து பயிர்கள் அனைத்தும் அழுகி நாசமானது. இப்போது, வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் பொய்த்து வறட்சியால் தமிழகம் முழுவதும் வறண்டு காணப்படுகிறது. குடிநீருக்குக்கூட பொதுமக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு கூறுவது ஏற்புடையதல்ல.
தோட்டக்கலைப் பயிர்களை பயிரிட்ட விவசாயிகள், நன்செய் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், மானாவாரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேளாண்மை பணிகள் கிடைக்கும் வரையில் மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை என தென்மாவட்டங்கள் அனைத்துமே வறட்சிக்கு இலக்காகி உள்ளன.
உயிரிழந்த விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ரூ.3 லட்சம் உதவித்தொகை என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும். எனவே, உயிரிழந்த விவசாயிகள் அனைவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இல்லையெனில், திருச்சி, தஞ்சாவூரைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த கட்சியினர் கலந்து கொண்டு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாளை அவசரக் கூட்டம்: புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களது அவசரக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் இப்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com