வறட்சியால் பாதித்த விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம்

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியது:
தமிழகத்தில் வரலாறுகாணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு வந்தநிலையில், நிகழாண்டு சம்பாவும் பொய்த்துவிட்டது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரணம் என்பது யானைப்பசிக்கு சோளப்பொறிபோன்று உள்ளது. மத்திய அரசும் தனது நிதிநிலை அறிக்கையில் வறட்சி நிவாரணத்துக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதுபோல், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்ப் பாதிப்பால் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் செவ்வாய்க்கிழமை (பிப்.7) மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது அந்த கட்சி எம்எல்ஏக்கள் உரிமை. ஆனால், சசிகலாவை முதல்வராக்குவது என்பதன் வாயிலாக அதிமுக எம்எல்ஏக்கள் மக்களின் எண்ணத்துக்கு எதிர்மறையான செயலை செய்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com