19 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வரை 19 லட்சம் குழந்தைகள், சிறுவர்களுக்கு தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறினார்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வரை 19 லட்சம் குழந்தைகள், சிறுவர்களுக்கு தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறினார்.
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்கெனவே தட்டமைக்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தட்டம்மை தடுப்பூசியோடு ரூபல்லா அம்மை நோய்க்கான தடுப்பூசியையும் சேர்த்து ஒரே ஊசியாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறும்.
9 மாதக் குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை இந்த தடுப்பூசி வழங்கப்படும். தமிழகத்தில் 1.8 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சில இடங்களில் தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
தட்டம்மை ரூபல்லா தடுப்பூசியின் காரணமாக குழந்தைகளுக்கு உடனே காய்ச்சல் வராது.
பீதி வேண்டாம்: சளி, காய்ச்சலுக்கான கிருமிகள் உடலில் ஏற்கெனவே தொற்றியிருந்து பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஏற்படும் காய்ச்சலை தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் வருகிறது என்று தவறாகக் கருதப்படுகிறது.
குழந்தைகளுக்கு இயற்கையாகவே ஊசி என்றால் பயம் இருக்கும். அதன் காரணமாக ஏற்படும் பதற்றத்தினால் சிலருக்கு மயக்கம் வரலாம். எனவே, மக்கள் பீதியடைய வேண்டாம்.
காலையில் சாப்பிட வேண்டும்: தடுப்பூசி போடுவதற்காக வரும் குழந்தைகள் காலை உணவு கட்டாயம் சாப்பிட்டிருக்க வேண்டும். வெறும் வயிற்றோடு தடுப்பூசி போடக்கூடாது. மேலும் தடுப்பூசி போடப்படும் இடத்தில் குடிநீர் வைத்திருக்க வேண்டும்.
6 அல்லது 7-ஆவது நாள்: தடுப்பூசி போட்ட உடன் சிலருக்கு அந்த இடத்தில் அரிப்பு ஏற்படலாம். அது பெரும்பாலும் 15 நிமிடங்களில் சரியாகிவிடும். அவ்வாறு குணமாகாதவர்களுக்கு மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.
தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு 6 அல்லது 7-ஆவது நாள் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. காய்ச்சலுக்கான மருந்தை எடுத்துக் கொண்டால் போதுமானது.
இந்த தடுப்பூசியானது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே, குழந்தைகள், சிறுவர்கள் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் முகாம் தொடங்கிய 2 நாள்களில் 19 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com