230 கிலோ போதை பாக்குகள் பறிமுதல்

விழுப்புரம் மளிகைக் கடையில், தடை செய்யப்பட்ட 230 கிலோ போதை பாக்குகள் பதுக்கி வைத்திருந்ததை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து கிடங்குக்கு "சீல்' வைத்தனர்.

விழுப்புரம் மளிகைக் கடையில், தடை செய்யப்பட்ட 230 கிலோ போதை பாக்குகள் பதுக்கி வைத்திருந்ததை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து கிடங்குக்கு "சீல்' வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள், புகையிலைப் பொருள்கள் பரவலாக விற்பனை செய்வதாகவும், மொத்த வியாபாரிகள் இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
அதன் பேரில், விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் 16 பேர் அடங்கிய குழுவினர் நியமன அலுவலர் கு.வரலட்சுமி தலைமையில் விழுப்புரம் கடை வீதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பாகர்ஷா வீதியில் உள்ள காளிதாஸ் என்பவரது மளிகை மொத்த வியாபாரக் கடையில் சோதித்தபோது, கடையிலும் மாடியிலிருந்த கிடங்கிலும் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், எம்டிஎம், கூல்லிப், எஸ்எம்ஜி, சைனிகைனி ஆகிய போதைப் பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் 230 கிலோ அளவில் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அந்த கடையின் கிடங்குக்கு "சீல்' வைக்கப்பட்டது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கு.வரலட்சுமி கூறியது:
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், விழுப்புரம் மார்க்கெட் வீதியில் 20 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், காளிதாஸ் என்பவரின் கடையில் உள்ள கிடங்கில் இருந்த தடை செய்யப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 230 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து "சீல்' வைத்துள்ளோம். அப்பொருள்களின் மாதிரி கிண்டி பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதே கடையில், கடந்த ஜூன் மாதம் ஏற்கெனவே சோதனையிட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் இவர்கள் விற்பனை செய்துள்ளதால், உணவுப் பொருள் வழங்கல் ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் பேரில், விரைவில் கடைக்கும் "சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com