அம்மையநாயக்கனூரில் தடுப்பூசி: 4 மாணவர்கள் மயக்கம்

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரில் செவ்வாய்க்கிழமை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரில் செவ்வாய்க்கிழமை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.
அம்மைநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகள் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை எனக் கூறி, பள்ளியை முற்றுகையிட்டனர். எனவே, பள்ளியின் தலைமையாசிரியரும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டாம் என மருத்துவக் குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் சித்ரா, பொதுமக்களிடம் தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் சமாதானம் அடைந்த பெற்றோர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதையடுத்து, தடுப்பூசி போட்ட 20 மாணவர்களில் விஜயலட்சுமி, மலைச்சாமி, காளிதாஸ் மற்றும் மகேஷ்வரி ஆகிய 4 பேர் மயக்கம் அடைந்ததாக, தகவல் பரவியது.
அதேபோல், அம்மையநாயக்கனூர் அடுத்துள்ள அழகம்பட்டி ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியிலும் தடுப்பூசி போட்ட பின், அப்பள்ளியைச் சேர்ந்த 3 சிறுமிகள் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியன் கூறியது: அம்மையநாயக்கனூர் அரசுப் பள்ளியில் சஞ்சய் (14) என்ற ஒரு மாணவர் மட்டுமே மயக்கம் அடைந்துள்ளார். 2 நாள்களுக்கு முன்பு சமைத்த மீன் குழம்பை சாப்பிட்டதால், அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
அதேபோல், அழகம்பட்டி பள்ளியில் அனிதா, ஸ்வேதா, நந்தினி ஆகிய 3 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். காலை உணவு சாப்பிடாமல் வந்து தடுப்பூசிப் போட்டுக் கொண்டதால், அந்த மாணவிகள் மயக்கம் அடைந்திருப்பது தெரியவந்தது. இந்த 4 பேரும் சிகிச்சைக்குப் பின்பு நலமாக உள்ளனர். இதன் மூலம், மாணவர்களின் மயக்கத்துக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com