அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதன்முறையாக சிறந்த வீரர், காளைகளுக்குப் பாராட்டுச் சான்று

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன் முறையாகப் பாராட்டுச் சான்று வழங்கப்பட உள்ளது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன் முறையாகப் பாராட்டுச் சான்று வழங்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற தடையால் இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வரும் வெள்ளிக்கிழமை (பிப்.10) நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு குழுவினருடன், ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என்.ஆறுமுகநயினார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கால்நடை பராமரிப்புத் துறையின் சோதனைக்குப் பிறகே காளைகள் பங்கேற்க அனுமதிக்கப்படும். அதேபோல, மருத்துவத் துறையினர் அனுமதி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். காளைகள் பதிவு புதன்கிழமை தொடங்குகிறது.
ஜல்லிக்கட்டுக்காக 13 மருத்துவக் குழுக்கள், 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.
6 இடங்களில் பெரிய திரைகள் மூலமாக ஜல்லிக்கட்டு ஒளிபரப்பு செய்யப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு விழாக் குழுவினரால் பரிசுகள் வழங்கப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த வீரர்களுக்கும், காளைகளுக்கும் பாராட்டுச் சான்று அளிக்கப்படும். பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்காணிக்க மதுரை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் இடம் பெறுவர் என்றார்.
கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை: முன்னதாக, அலங்காநல்லூர் கிராம மக்களுடன் மதுரை கோட்டாட்சியர் ஜி.செந்தில்குமாரி, செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்தினார்.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக விழாக் குழுவினருக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. விழாக் குழுவில் ஆளுங்கட்சியினரே இருப்பதால், ஜல்லிக்கட்டுக்கு வரும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் இருக்காது என புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இரு தரப்பினரையும் அழைத்து கோட்டாட்சியர் பேச்சு நடத்தினார். இதில் விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கான வரவேற்பு குறித்து அரசு விதிகள் பின்பற்றப்படும். இதில் விழாக் குழு தலையிடாது எனத் தெரிவித்தார். அதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வருவதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அவருக்கு வரவேற்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com