கட்டாயப்படுத்தியதால் ராஜிநாமா: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

என்னை கட்டாயப்படுத்தியதால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார்.
சென்னை மெரீனாவிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை மெரீனாவிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

என்னை கட்டாயப்படுத்தியதால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் விரும்பினால் தனது ராஜிநாமாவை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக மக்களுக்காக கடைசி வரையில் தன்னந்தனியாக நின்று போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-இல் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து மெளனமாக இருந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது மெளனத்தை செவ்வாய்க்கிழமை கலைத்தார்.
திடீர் தியானத்தால் பரபரப்பு:
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணி அளவில் திடீரென வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 50 நிமிஷங்கள் தியானம் செய்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அவர் தியானம் இருக்கத் தொடங்கிய செய்தி பரவி பரபரப்பு ஏற்பட்டு, ஏராளமான செய்தியாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்தனர். சுமார் 9.40 மணி அளவில் தியானத்தைக் கலைத்து விட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தைச் சுற்றி வந்து வணங்கினார்.
பின்னர் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
என் மனசாட்சி உந்தப்பட்டதால் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மெளன அஞ்சலி செலுத்த வந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்துதல்படுத்தியது. அதன் விளைவாகத்தான் நான் இங்கு வந்து நிற்கிறேன்.
சுமார் 70 தினங்கள் ஜெயலலிதா உடல்நிலை நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன். பின்னர் கழகத்தின் பொதுச் செயலாளராக மதுசூதனனை அமர்த்தவேண்டும் என்று சொன்னார். அதே சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச் சொன்னார். நான் அதை முதலில் ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமர வைத்தால், கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால் நான் மீண்டும் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
அதன்பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து, திவாகர் உங்களிடம் கேட்கச் சொன்னார். "கழகத்தின் பொதுச் செயலாளராக அக்காவை (சசிகலா) ஆக்கவேண்டும், இல்லையென்றால் அவரை நான் ஊருக்கு அழைத்துச் செல்லவேண்டியதுதான்' என்று சொன்னார்.
அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து கேட்டேன். அவர்களும் அந்தக் கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலாவை, பொதுச் செயலாளராக்க சம்மதித்தோம்.
இதற்கிடையே வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து முடித்தேன். அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் நற்பெயரைக் காப்பாற்றவேண்டும் என்றே அனைத்தும் செய்தேன். இதற்குப் பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டம், மெரீனாவில் நடந்தது. சட்டம் ஒழுங்குக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்று கருதி பிரதமரைச் சந்தித்து அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தினேன்.
ஆனால் பிரதமர் மோடி, மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருமாறு யோசனை கூறினார். அதன்படி சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எனது நடவடிக்கையை சரியாக மேற்கொண்டேன்.
அந்த நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே, வேறு ஒருவரை முதல்வராக ஆக்கவேண்டும் என்று சொன்னால், அது தேவையில்லாமல் ஒரு பிரச்னையை உருவாக்குமே என்று கேட்டபோது, அவரைக் கண்டித்துவிட்டோம். இனி யாரும் அப்படிப் பேசமாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் அதன் பிறகு செல்லூர் ராஜு, செங்கோட்டையன் போன்றவர்களும் அதே கருத்தைச் சொன்னார்கள். அதன்பிறகு என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன். நாட்டு மக்களும் தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும் வருத்தத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.
மனநிலை பாதிப்பு: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் இதுபோன்ற கருத்துகளால் பொது மக்கள் கட்சி மீது அதிருப்தியிலும், கட்சியினர் வருத்தத்திலும் இருப்பதாக கூறினேன்.
மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் நாம் கட்டுப்பாட்டுடன், கவனமுடன், பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் கடுகளவும் பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பொறுமையுடன், எதையும் விளம்பரப்படுத்தாமல் இருந்தேன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. கட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
என்னையும் போயஸ் தோட்டத்துக்கு வரும்படி அழைத்தார்கள். நானும் சென்றேன். மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள், பொதுச் செயலாளரின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.
2 மணி நேரம் விவாதம் செய்தேன்:
பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். இதற்கு என்ன அவசரம் என்று கேட்டேன். பொதுச் செயலாளர், முதல்வர் இரண்டு பதவிகளையும் சசிகலாவுக்கே தர வேண்டும். அதற்கு நான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்கள்.
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இப்போது ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்களே என்றேன். இது நியாயம் தானா என்று கிட்டத்தட்ட 2 மணி நேரம் விவாதம் செய்தேன்.
என்னை கீழ்நிலைப்படுத்துவதற்காக செய்யப்பட்ட செயல்களை வருத்துத்துடன் எடுத்துக் கூறினேன். யாரும் எதுவும் சொல்லவில்லை. அந்த நிலையிலும் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்றுங்கள். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாக ஆகும். எனது தாயிடம் சொல்லி விட்டு வருகிறேன் என்று கூறி திரும்பிவிட்டேன். என்னை கட்டாயப்படுத்தியதால்தான் ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தில் கையெழுத்திடும் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன்.
யார் முதல்வராக வர வேண்டும்? அம்மாவின் ஆன்மா நாட்டு மக்களுக்கும், கோடானு கோடான தொண்டர்களுக்கும் இதனை தெரியப்படுத்தச் சொன்னதால் இங்கு வந்தேன். கட்சிப் பொறுப்புக்கு அடிமட்ட செயல்வீரர்கள் எண்ணுகிற ஒருவர்தான் பொதுச் செயலாளராக வர வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் எண்ணுகிற ஒருவர்தான் முதல்வராக வர வேண்டும்.
தமிழகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஓ.பி.எஸ். இல்லை. யாரோ ஒருவர் இன்றைக்கு கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கிற நல்ல பெயரை காப்பாற்றும் ஒருவர் வர வேண்டும். இந்த எண்ணத்தில்தான் இப்போது இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். கடைசியாக உறுதியாக இருப்பேன். தன்னந்தனியாக இருந்து போராடுவேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

"அவமானப்படுத்தப்பட்டேன்'

நான் முதல்வர் பதவியில் இருந்தபோதே அவமானப்படுத்தப்பட்டேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக வர வேண்டுமென, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை வலியுறுத்துகிறார். மூத்த உறுப்பினர் செங்கோட்டையனும் அதே கருத்தை வலியுறுத்துகிறார்.
இதையடுத்து, நான் சில அமைச்சர்கள் சில எம்.எல்.ஏ.க்களை அழைத்து அதிமுகவின் ஒற்றுமையை கருதி, ஆட்சியை நிலைமை கருதி கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது என்று வேண்டாம் என்று சொன்னேன்.
முதல்வராக அமர வைத்து, ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள் என்றே கேட்டேன். தனிப்பட்ட முறையில் என்னை இகழ்ச்சியாக அவமானப்படுத்திப் பேசினால், பொறுத்துக் கொள்வேன். பொது வாழ்க்கைக்கு வந்தால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தாங்கிக் கொண்டிருந்தேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com