ஜீரோ ஹீரோவானால் ஸ்டாலின் ஜீரோ ஆவார்!

திமுகவில் ÷ஏற்பட்டிருக்கின்ற திடீர் திருப்பத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து வி.கே. சசிகலாவை முன்மொழிந்த ஓ. பன்னீர்செல்வம் தனது மனச்சாட்சியின் குரலைக் காரணம் காட்டி
ஜீரோ ஹீரோவானால் ஸ்டாலின் ஜீரோ ஆவார்!

திமுகவில் ÷ஏற்பட்டிருக்கின்ற திடீர் திருப்பத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து வி.கே. சசிகலாவை முன்மொழிந்த ஓ. பன்னீர்செல்வம் தனது மனச்சாட்சியின் குரலைக் காரணம் காட்டி, தான் பதவி விலக வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக வி.கே. சசிகலாவை சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததைத் தொடர்ந்து அவரை முதல்வராகப் பதவி ஏற்க பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைக்காததன் மூலமாகவும் சென்னைக்கு திரும்பாததன் மூலமாகவும் இதன் பின்னணியில் ஏதோ அரசியல் மாற்றங்கள் நிகழப் போவது உறுதியானது.
÷ஆளும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே. சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைக்கப்படுவதுதான் அரசியல் அமைப்பு சட்டப்படி வழக்கம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது பிரதியாக சசிகலா தொடர்புடைய வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தது. இதன் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில் வி.கே. சசிகலா முதலமைச்சராக நியமிக்கப்படலாமா கூடாதா என்பது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் தில்லியில் பா.ஜ.க. அரசிடமும் மூத்த வழக்குரைஞர்களிடமும் கலந்து ஆலோசனை செய்ய முற்பட்டார்.
÷இந்தப் பிரச்னையில் பல மூத்த அரசியல் சட்ட நிபுணர்களும் வழக்குரைஞர்களும் வி.கே. சசிகலாவை முதலமைச்சராக நியமிப்பதில் சட்டப்பேரவை அதிமுக கட்சியின் முடிவை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். முன்பு இதே வழக்கில் மேல் முறையீடு நிலுவையில் இருக்கும்போது முதல் குற்றவாளியான ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க முடியுமானால், வி.கே. சசிகலா பதவியேற்பதில் எந்தவித தடையும் இல்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
÷2001-இல் சொத்துக் குவிப்பு வழக்கு மட்டுமல்லாமல் டான்சி, பிளசன்ஸ்டே ஹோட்டல் உள்ளிட்ட ஏனைய வழக்குகள் நிலுவையில் இருந்தும்கூட, தீர்ப்பு வெளியிடப் படாத நிலையிலும்கூட, ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாமல் இருந்தும்கூட அன்றைய ஆளுநர் பாத்திமா பீபீ ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவி பிராமாணம் செய்து வைத்தார். அப்படியிருக்கும் போது, இன்று பெரும்பாலான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற வி.கே. சசிகலாவை முதல்வராக பதவிப் பிராமணம் செய்து வைக்க வேண்டியது அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநரின் கடமை என்பதுதான் சட்ட வல்லுநர்களின் கருத்து. இன்றைய நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி ஜெயலலிதாவும் சசிகலாவும் குற்றவாளிகள் அல்ல. மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது, அவ்வளவே.
÷வி.கே. சசிகலாவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா இல்லை என்பதை சட்டப்பேரவையில் முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் நிரூபிப்பதன் மூலம்தான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றுதான் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.
÷ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பது, அல்லது, தனது பதவி விலகலை திரும்பப் பெற விரும்புவதாக கூறியிருக்கும் தாற்காலிக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தனது பெரும்பான்மை பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிக்கச் சொல்வது, இரண்டில் ஒன்றுதான் ஆளுநரின் முடிவாக இருக்க முடியும்.
÷பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வராமல் மும்பையிலேயே இருந்துகொண்டு தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவது, மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக, பின்னணியில் இருந்துகொண்டு தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது என்கிற குற்றச்சாட்டை வலுப்படுத்தும். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக் கலைப்பை ஊக்குவிப்பதோ, மாற்று அரசை ஏற்படுத்துவதோ, திமுகவுக்கும் காங்கிரஸýக்கும் சாதகமாக இருக்குமேயொழிய அடுத்த 5 மாதங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக இருக்காது.
÷எது எப்படியிருந்தாலும், இன்று ஊடகங்களின் ஒட்டுமொத்த வெளிச்சமும் ஓ. பன்னீர்செல்வத்தின் மீதும் வி.கே. சசிகலாவின் மீதும் விழுந்திருப்பதால், எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவார். 1972-இல் திமுக பிளவுபட்டபோது,
அன்றைய பிரதான எதிர்க்கட்சியான காமராஜ் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ்தான் பலவீனமானதே தவிர, திமுகவும் அதிமுகவும் அல்ல. அதே நிலைமை தமிழகத்தில் மீண்டும் ஏற்படுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com