திமுகவை திட்டாமல் பன்னீர்செல்வத்துக்கு பதில் சொல்லுங்கள்: சசிகலாவுக்கு ஸ்டாலின் பதிலடி

அதிமுகவுக்குள் நடக்கும் விஷயங்களுக்கு திமுகவை திட்டாமல், பன்னீர்செல்வத்துக்கு பதில் அளிக்கும்படி, சசிகலாவுக்கு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவை திட்டாமல் பன்னீர்செல்வத்துக்கு பதில் சொல்லுங்கள்: சசிகலாவுக்கு ஸ்டாலின் பதிலடி


சென்னை: அதிமுகவுக்குள் நடக்கும் விஷயங்களுக்கு திமுகவை திட்டாமல், பன்னீர்செல்வத்துக்கு பதில் அளிக்கும்படி, சசிகலாவுக்கு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப்  பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது, தி.மு.க. மீது போலி விமர்சனத்தை வைத்துள்ளதாகவே கருதுகிறேன். அதிமுகவிற்குள் நடக்கும் எந்த விஷயத்துக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சசிகலா நடராஜன் அறிய வேண்டும் என்றால் அவர் முதலில் “தமிழக அரசியலை” புரிந்து கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அதிமுக தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி தி.மு.க. மீது பழி போடுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகவும், வெளியில் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கும் கட்சியாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற போது அந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பங்கேற்றேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதற்காக எனக்கு நன்றி தெரிவித்ததை தோழி என்று சொல்லிக் கொள்ளும் சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி? ஏன் சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக் கொண்டிருக்கிறோம்.

பன்னீர்செல்வம் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகும், அதே அரசியல் நாகரீகத்தை சட்டமன்றத்திலும், வெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்றது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுவது ஒரு வேளை சசிகலா நடராஜனுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்கு தி.மு.க. பொறுப்பாக முடியாது. ஆகவே அதிமுகவிற்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு” என்னைப் பார்த்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது.

ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு அவர் பட்ட அவமானங்களை ஜெயலலிதா சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார். அதற்கு திருப்பி பதில் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு தி.மு.க.வை சீண்ட வேண்டாம். நிலைத்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வரே மிரட்டப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுப்பதை விட இது குறித்து சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com