ஆளுநர் சென்னை வருகை: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்குமா?

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று வியாழக்கிழமை (பிப்.9)
ஆளுநர் சென்னை வருகை: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்குமா?

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று வியாழக்கிழமை (பிப்.9) பிற்பகல் சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை அதிமுக பேரவை உறுப்பினர்களின் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த 5-ஆம் தேதி கோவையில் இருந்து தில்லி சென்ற ஆளுநர், அங்கிருந்து மும்பை சென்றார். அதைத் தொடர்ந்து அவர் எப்போது தமிழகம் வருவார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது.

இதையடுத்து சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தில்லி சென்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் முறையிடப்போவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து தில்லி செல்வதற்காக நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் அதிமுக எம்எல்ஏக்கள்.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று வியாழக்கிழமை சென்னை வருகை உறுதியானதையடுத்து, தில்லி செல்லவிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தில்லி பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டனர்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் தனக்கான பலத்தை நிரூபிப்பேன் எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிமுக பேரவை உறுப்பினர்களின் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை இன்று வியாழக்கிழமை சந்தித்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறி, தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.

அதேசமயத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்கெனவே ஏற்றுள்ள நிலையில், அவர் தம்மைச் சந்திப்பதற்கு ஆளுநர் அனுமதி தருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com