ஐ.ஏ.எஸ்.அதிகாரி சுரேஷின் ரூ.2.77 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பப்பட்ட வழக்குத் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷின் ரூ.2.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பப்பட்ட வழக்குத் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷின் ரூ.2.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியது.
இது குறித்த விவரம்:
தமிழகத்தைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சுரேஷ். இவர்,மத்திய அரசுப் பணியாக கப்பல் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதில் சென்னை துறைமுகத்தின் தலைவராக 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை சுரேஷ் பதவி வகித்தார். இவர், சென்னை துறைமுகத்தின் தலைவராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல மத்திய அமலாக்கத்துறையும் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக சுரேஷின் பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள ரூ.2.77 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை புதன்கிழமை முடக்கியது. இதில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்த ரூ.29 லட்சம் ரொக்கத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேலும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் சுரேஷ், அவரது குடும்ப நண்பர் கே.ராமராஜா என்ற குவைத் ராஜா மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் தங்கம்,வைர சுரங்கத்துறையில் முதலீடு செய்து, வியாபாரம் செய்து வருவதும், கொடைக்கானலில் சுரேஷுக்கு பெரும் மதிப்பிலான சொத்து இருப்பதும் தெரியவந்தது. இதில் குவைத் ராஜாவும், சுரேஷின் உறவினர் பி.கே.கணேஷ்ராமும் பினாமியாக செயல்பட்டு வருவதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல ரியல் எஸ்டேட் துறையிலும் சுரேஷ் முதலீடு செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com