தமிழக அதிமுகவில் ஏற்பட்ட பிளவு புதுவையிலும் எதிரொலி

தமிழக அதிமுகவில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் புதுவையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

தமிழக அதிமுகவில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் புதுவையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியையும், ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்று கருதப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, கட்சியும் ஆட்சியும் ஒரே நபரிடம் இருக்க வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால், முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்தார். தற்போது இடைக்கால முதல்வராகச் செயல்பட்டு வரும் அவர், திடீரென செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறு குற்றச்சாட்டுகளை சசிகலா தரப்பினர் மீது கூறினார். இதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்பாகக் காணப்பட்டு வருகிறது. முக்கியத் தலைவர்கள் மாறி மாறி தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
புதுவையில்... தமிழகத்தில் நிலவும் இந்தப் பரபரப்பு புதுவையிலும் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவுக்கு ஆதரவாக புதுவையைச் சேர்ந்த 4 அதிமுக எம்எல்எக்கள் செயல்பட்டு வந்தனர். அவர்கள் வெளிப்படையாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பெரும்பாலான முக்கியப் பிரமுகர்கள் அமைதியாக இருந்து வந்தனர்.
தமிழக சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணன் கட்சியில் இருந்து விலகினார். அதன் மூலம், புதுவை அதிமுகவில் சசிகலாவுக்கு எதிர்ப்பு இருப்பது தெரியவந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணன் ஆதரவு தெரிவித்திருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகரும் பன்னீர்செல்வத்துக்கு உடனடியாக ஆதரவு தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் மெளனம்: தற்போது நிலவும் குழப்பங்களுக்கு இடையே, யாருக்கு ஆதரவு என்பது குறித்து அதிமுக எம்எல்எக்கள் 4 பேரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த ஓம்சக்தி சேகருக்கு, அதிமுக புதுவை மாநிலச் செயலர் புருஷோத்தமன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஓம்சக்தி சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
தமிழகத்தில் அதிமுக பிளவுபட்டால், புதுவையிலும் பிளவுபடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com