துரோகங்கள் வென்றதில்லை

துரோகங்கள் ஒருபோதும் வென்றதில்லை. அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதிபட தெரிவித்தார்.
துரோகங்கள் வென்றதில்லை

துரோகங்கள் ஒருபோதும் வென்றதில்லை. அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதிபட தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் அதிருப்தி அணியை உருவாக்கியுள்ள சூழ்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பேசியது:-
33 ஆண்டு காலங்களில் எத்தனையோ நிகழ்வுகள், எத்தனையோ அதிர்ச்சிகள். மறைந்த ஜெயலலிதாவை நோக்கி வந்த பல துரோகங்களை, அவரோடு இணைந்து நானும் அவற்றைச் சந்தித்திருக்கிறேன். அதையெல்லாம் வென்றிருக்கிறோம். இதையும் வெல்வோம்.
ஜெயலலிதா மறைந்த போது, குடும்பமாக உள்ள கட்சியில் கலகம் வராதா என்று கண்ணி வைத்து காத்திருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. ஜெயலலிதா கட்டிக் காத்த குடும்பத்தில் அன்புதான் மேலோங்கி நின்றது. கட்டுப்பாடுதான் ஓங்கி நின்றது.
திமுகவின் சதி: ஜெயலலிதா மறைவின்போது ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரும் முதல்வராக என்னை பொறுப்பேற்கச் சொல்லி நிர்பந்தம் செய்தார்கள். அப்போது எதையும் ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர வேண்டும் என்பது நான் எடுத்த முடிவுதான்.
அதிமுக அன்று பிளவுபட்ட நிலையில், மாற்று அணியில் இருந்து அவர் செய்த செயல்களை எல்லாம் கருணை உள்ளத்தோடு மன்னித்துத்தான் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பலமுறை அந்த வாய்ப்பைப் பெற்றார்.
ஜெயலலிதாவை அழிக்கத் துடித்தது திமுக. அந்தக் கட்சியுடன் பன்னீர் செல்வம் தொடர்பு வைத்திருந்தார். ஜெயலலிதா எதற்காக போராடினாரோ அதனை ஈடேற்றும் விதத்தில் அவரின் செயல்கள் அமைந்திடவில்லை.
ஜெயலலிதா இல்லாத இந்த நேரத்தில், முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டதால், அவர் வகுத்த பாதையிலிருந்து விலகிட முடியாது. இங்கு முதல்வர் என்கிற சொல்லைக் காட்டிலும் ஜெயலலிதா என்ற சொல்லுக்கு மதிப்பு அதிகம்.
எதிரிகளின் சலசலப்புக்கு அதிமுக அஞ்சாது, நானும் அஞ்சமாட்டேன்.
ஜெயலலிதாவின் கனவுகளும், அவர் இதயத்தில் தாங்கிய கணலும் என்றும் நம்மிடம் இருக்கவேண்டும். அவை நிறைவேற்றப்பட வேண்டும். எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது.
சட்டப் பேரவை செயல்பாடு: சட்டப் பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து துரைமுருகன் பேசும் போது, அதற்கு எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் பன்னீர்செல்வம் மௌனம் காத்தார். அவரது இந்தச் செயல் அவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டதை என்னால் நன்கு உணர முடிந்தது. அவரின் இந்தச் செயலால், அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மிகுந்த கொதிப்படைந்தனர். அவருக்கு நெருடல் ஏற்படும் வகையில் அமைச்சர்களும், கட்சியினரும் கருத்துத் தெரிவித்தனர். அப்போது அதை அவர் என்னிடம் சொன்ன போது, அதற்கு உரிய மதிப்பளித்து, அமைச்சர்களிடமும், சட்டப் பேரவை உறுப்பினர்களிடமும், கட்சியினரிடமும் அவ்வாறு கருத்துச் சொல்ல வேண்டாம் என்று நான் கண்டித்தேன். பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு உரிய முக்கியத்துவம் அளித்தேன்.
ஆனால், சட்டப் பேரவையில் திமுக மற்றும் முதல்வர் ஆகியோருக்கு இடையேயான வார்த்தை பரிமாற்றங்களில் இருந்த உள்அர்த்தம் எனக்குப் புரியாமல் இல்லை. அது, அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்லாமல் தடுப்பதுதான் பொதுச் செயலாளரான என்னுடைய கடமை.
துரோகங்கள் ஒரு போதும் வென்றதில்லை. அதிமுகவில் பிளவு ஏற்படுத்த யாராலும் முடியாது. மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன் என்றார் சசிகலா.
ஆசை காட்டப்பட்டதா?
முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். என்னை (சசிகலா) சட்டப் பேரவை குழுத் தலைவராக முன்மொழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டுதான் இருந்தார்.
48 மணி நேரம் கழித்து ஒரு பொய்யைச் சொல்கிறார் என்றால், இந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? யார் யாருடன் ஆலோசித்தார்? திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் சட்டப் பேரவையில் பேசியது போன்று, கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா, ஆசை காட்டப்பட்டதா என்று சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com