நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு: போதிய ஆதாரங்கள் உள்ளதாக மேலூர் தம்பதியர் பதில்

நடிகர் தனுஷ் தங்களது மகன் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக, மேலூர் தம்பதியர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தனர்.
நடிகர் தனுஷை மகன் என்று உரிமை கோரிய வழக்கு: போதிய ஆதாரங்கள் உள்ளதாக மேலூர் தம்பதியர் பதில்

நடிகர் தனுஷ் தங்களது மகன் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக, மேலூர் தம்பதியர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தனர்.

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி, மனு தாக்கல் செய்தனர். மேலும், தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ. 65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த மேலூர் நீதிமன்றம், நடிகர் தனுஷை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மேலூர் தம்பதியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி ஜி. சொக்கலிங்கம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கதிரேசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நடிகர் தனுஷ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவர், எழும்பூர் குழந்தைகளுக்கான அரசு மருத்துவமனையில் பிறந்தார் என்பது தவறு. அவரது இயற்பெயர் வெங்டேஷ் பிரபு என்றும், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்ததாகவும் கூறியுள்ளார்.

அது முற்றிலும் தவறான தகவல். அவர், திருப்பத்தூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மனுதாரர் பலமுறை தான் மேலூரில் பிறந்ததாக, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், இவர் எங்களது மகன்தான் என்பதற்கு பல வாய்மொழி சாட்சிகள் உள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (பிப்.9) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com