பேரவையில் பலத்தை நிரூபிப்பேன்

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் என் பலத்தை நிரூபிப்பேன் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பேரவையில் பலத்தை நிரூபிப்பேன்

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் என் பலத்தை நிரூபிப்பேன் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை அளித்த பேட்டி: அதிமுகவுக்கு நான் துரோகம் இழைத்ததாக ஒருபோதும் கூறப்பட்டது இல்லை. அது, ஆளும்கட்சியாக இருந்தபோதும், எதிர்கட்சி வரிசையில் இருந்தபோதும். இப்போது, கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறுகின்றனர். இதற்கு காலம் உரிய பதிலை அளிக்கும்.
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா 16 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தந்தார். ஜெயலலிதாவுக்குச் சோதனை ஏற்பட்டபோது 2 முறை என்னை முதல்வராக்கினார். ஜெயலலிதாவின் எண்ணங்கள் குண்டுமணி அளவுகூட மாறாமல் ஆட்சி புரிந்தேன்.
பலத்தை நிரூப்பிப்பேன்: அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மையான ஆதரவு எனக்குத்தான் உள்ளது. தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற எம்.எல்.ஏ.க்கள் தொலைபேசி வாயிலாகப் பேசி வருகின்றனர். பேரவையில் என் பலத்தை நிரூபிப்பேன். பலத்தை நிரூபிப்பதற்காக திமுகவின் ஆதரவைக் கேட்க மாட்டேன். யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு ஜெயலலிதா கூறியுள்ளார். அதன்படிதான் செயல்படுவோம். திமுக - பாஜகவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டோம். புறவாசல் வழியாக நான் ஆட்சி அமைக்க மாட்டேன். அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைப்பேன்.
விசாரணைக் கமிஷன்: ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இது தொடர்பாக பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். அந்த விசாரணைக் கமிஷன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும்.
பேசியதில் தவறு இல்லை: மு.க.ஸ்டாலினும் நானும் பேசிக் கொண்டிருந்ததில் இருந்தே திமுகவின் பக்கம் நான் இருப்பதாக சசிகலா கூறியுள்ளார். அம்மாவுக்கு என் விசுவாசம் பற்றி நன்கு தெரியும். 100-க்கு 110 சதவீதம் விசுவாசமாக நடந்து வந்திருக்கிறேன். ஜெயலலிதாவைப் பொருத்தவரை யாராக இருந்தாலும் ஒருமுறை தவறு செய்தால் அதே பொறுப்பை வழங்கமாட்டார்.
நான் சிரித்துப் பேசியதைக் குற்றமாகக் குறை கூறுகிறார்கள். சிரிப்பது தவறா? மனிதர்களின் தனிப்பட்ட குணம் சிரிப்பதுதான். யாருடைய மனமும் புண்படும் வகையில் நான் பேசுவது இல்லை. பாஜக என் பின்னால் இருப்பதாகக் கூறுவதெல்லாம் வடிகட்டிய பொய்.
தீபாவுக்கு அழைப்பு: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீது எனக்கு மரியாதை உண்டு. எங்களை ஆதரிக்குமாறு அவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
பொருளாளராக நீடிக்கிறேன்: அதிமுகவின் பொருளாளராக இப்போதும் நீடிக்கிறேன். என்னை யாராலும் பொறுப்பில் இருந்து நீக்க முடியாது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாது அடிப்படை உறுப்பினர்களும் தேர்வு செய்ய வேண்டும். அதிமுகவில் விரைவில் உள்கட்சித் தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் விரைவில் மக்களைச் சந்திக்க உள்ளேன். மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளார்கள் என்பதை நிரூபிப்போம்.
ராஜிநாமாவைத் திரும்பப் பெறுவேன்: அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன்தான் ஆட்சியை அமைப்பேன். மக்கள் விரும்பினால் ஆளுநரைச் சந்தித்து என் ராஜிநாமா கடிதத்தை திரும்பப் பெறுவேன் என்றார்.
மன்னிப்புக் கடிதம்: முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து சசிகலாவை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியேற்றியபோது, மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்கு திரும்ப அவர் அளித்த மன்னிப்புக் கடிதத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?
கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி, சோழவந்தான் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, மாலையில் ஊத்தங்கரை தொகுதி உறுப்பினர் மனோரஞ்சிதம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், வாசுதேவநல்லூர் தொகுதி உறுப்பினர் ஏ.மனோகரன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினர்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்த்து 6 அதிமுக உறுப்பினர்கள், சசிகலாவுக்கு எதிராக செயல்படத் தொடங்கியுள்ளனர். இதனால், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை (பேரவைத் தலைவருடன் சேர்த்து) 129-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com