ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா

அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வியாழக்கிழமை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து
ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்குகிறார் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா.
ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்குகிறார் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா.

அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வியாழக்கிழமை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமை கோரினார்.
மேலும் தமக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்தார்
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் சந்தித்த சில மணி நேரங்களில் அதாவது இரவு 7.30 மணி அளவில் ஆளுநரை, அவரது மாளிகையில் சந்தித்தார் சசிகலா.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அப்போது தமது ஆதரவாளர்களின் பட்டியலையும் ஆளுநரிடம் சசிகலா அளித்தார்.
எனினும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர் தனது முடிவை எப்போது அறிவிப்பார் என்பதும் தெரியவில்லை. எந்த முடிவும் எடுப்பதற்கு முன்னதாக சட்ட நிபுணர்களை அவர் கலந்து ஆலோசிக்கக்கூடும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெரீனா நினைவிடங்களில் அஞ்சலி: இந்தச் சந்திப்புக்கு முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய வி.கே.சசிகலா, ஆளுநர் மாளிகைக்கு இரவு சுமார் 7.20 மணிக்குச் சென்றார்.
அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன், கே.பி.அன்பழகன், ஜெயகுமார், மூத்த நிர்வாகி செங்கோட்டையன், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்டோர் சென்றனர்.
சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு, அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும், ஆளுநர் மாளிகைக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்கள் உள்பட யாரையும் சந்திக்காமல் வி.கே.சசிகலா தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
எப்போது முடிவுக்கு வரும்? வி.கே.சசிகலாவைச் சந்திப்பதற்கு முன்பாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிஷங்கள் வரை நடந்தது.
ஆளுநரைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், உறுதியாக நல்லது நடக்கும். தர்மம் வெல்லும் என்று மட்டுமே தெரிவித்தார். ஆளுநருடனான சந்திப்பின் விவரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
மாபெரும் திருப்பங்கள்: கடந்த 5-ஆம் தேதியன்று அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 7-ஆம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்ததுடன், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி ராஜிநாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாக குற்றம்சாட்டினார்.
இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம், தனது தலைமையில் ஆட்சி அமைக்க தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் சசிகலா ஏற்கெனவே உரிமை கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவோ, தமிழகத்தில் இல்லாததால் சசிகலா அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், கடுமையான குழப்பம் ஏற்பட்டது.
இந்தச் சிக்கலான சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பி.எச்.பாண்டியன், மதுசூதனன், எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட 5 எம்.எல்ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
விடுதிகளில் தங்கியவர்கள்: இதனிடையே, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை கூடினர். இந்தக் கூட்டத்தில் பேசிய வி.கே.சசிகலா, ஒற்றுமையுடன் இருந்து அரசியல் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக நிலவி வந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை (பிப்.9) மாலை சென்னை திரும்பினார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் விவரங்கள் குறித்தும், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் என்பது பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

ஆளுநர் முடிவு எப்போது?
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா ஆகியோர் தம்மை தனித் தனியே சந்தித்துப் பேசிய பிறகு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த முடிவையும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து சட்ட விதிகளுக்கு உட்பட்டே முடிவுகளை ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com