உலகின் இன்றைய பிரச்னைகளுக்கும் தீர்வு விவேகானந்தர்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எழுப்பப்படும் பிரச்னைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. உலகின் இன்றைய எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு சுவாமி விவேகானந்தரிடம்தான் இருக்கிறது

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எழுப்பப்படும் பிரச்னைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. உலகின் இன்றைய எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு சுவாமி விவேகானந்தரிடம்தான் இருக்கிறது என்றார் "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் விவேகானந்தா நவாராத்திரி மெரீனா கடற்கையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
4-ஆவது நாளான வியாழக்கிழமை "விவேகானந்தரும் சீடர்களும்' என்ற கருத்தை மையப்படுத்தி, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியது:
இந்தியா இன்று சுதந்திர இந்தியாவாக இருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டவர் விவேகானந்தர். நேதாஜி லட்சியப் புருஷராக, தன்னுடைய லட்சியப் பயணத்துக்கு உறுதுணையாகக் கருதியது விவேகானந்தரைத்தான். "எனக்கு உந்து சக்தி விவேகானந்தர் தான்' என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். இந்தியர்களுக்கு, நான் இந்தியன் என்கிற பெருமையை உணர்த்திய மாமனிதர் சுவாமி விவேகானந்தர்தான்.
உலகத்திற்கு மிகப்பெரிய மாற்றத்தை இந்த சென்னை நகரம் ஏற்படுத்தும் என்று விவேகானந்தர் அன்று கூறினார். அது உண்மை. தன்னுடைய மிகப்பெரிய ஆற்றலால் சுவாமி விவேகானந்தர் தீப்பொறியைப் பற்ற வைத்த இடம் சென்னை மாநகரம். அந்தத் தீப்பொறி தான் மிகப்பெரிய இயக்கமாக மாறியிருக்கிறது.
விவேகானந்தருக்கு எத்தனை சீடர்கள் இருந்தாலும் அவர்களுள் தனியாக நிற்பவர்கள் அளசிங்கப்பெருமாளும், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியும்தான். இவர்கள் இருவரும் விவேகானந்தருக்கு இரு கண்களாக, இரு கரங்களாக இருந்தனர்.
சிகாகோ சர்வ சமய மாநாட்டுக்கு விவேகானந்தர் எப்படியும் போக வேண்டும் என்று முதலில் முயற்சி எடுத்தவர் அளசிங்கப்பெருமாள். அவரை வற்புறுத்தி அனுப்பி வைத்தவர் பாஸ்கர சேதுபதி.
சிகாகோ மாநாட்டுக்குப் பிறகு விவேகானந்தர் சென்னைக்குத் திரும்பி வந்தார். அப்போது அவரை வண்டியில் ஏற்றி வைத்து, சீடர்களே ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
உலகத்தின் இன்றைய பிரச்னைக்கு தீர்வு விவேகானந்தரிடம் தான் இருக்கிறது. சிகாகோ மாநாட்டில் கலந்து கொண்ட ஏனைய மதத்தினர், "எங்கள் மதம்தான் சிறந்தது, நாங்கள் சொல்வதுதான் சரி' என்றனர். "நீங்கள் சொல்வதெல்லாம் சரி, நான் சொல்வதும் சரி. உங்களுடைய கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய பாதையை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று விவேகானந்தர் சொன்னார். இதுதான் இன்றைய உலகின் பிரச்னைக்குத் ஒரே தீர்வு' என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com