கடனாநதி அணைப் பகுதியில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்: ஆட்டை கடித்துக் குதறியது; மக்கள் அச்சம்

திருநெல்வேலி மாவட்டம், கடனாநதி அணைப் பகுதியில் சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்து ஆட்டைக் கடித்துக் குதறியதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், கடனாநதி அணைப் பகுதியில் சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்து ஆட்டைக் கடித்துக் குதறியதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அம்பாசமுத்திரம் வட்டம், கடையம் வனச் சரகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடனாநதி அணையை ஒட்டியுள்ள கிராமம் பெத்தான் பிள்ளைக்குடியிருப்பு. இங்கு, 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் இதுவரை 6 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. கடந்த ஜன. 30ஆம் தேதி இரவில் சிறுத்தை ஒன்று பிடிபட்டது.
மக்களின் அச்சத்தைப் போக்க, கடனாநதி அணையின் தெற்குப் பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலி சிறிது தொலைவுக்கு அகற்றப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பெத்தான்பிள்ளைக் குடியிருப்பைச் சேர்ந்த செல்லையா என்பவரது வீட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் குதறியுள்ளது. அப்போது நாய்கள் கடுமையாக குரைத்துள்ளன. இதனால், அங்கு வயலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த அருள்சாமி என்பவர், அப்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, சிறுத்தை ஒன்று செல்லையா வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டிச் சென்றதைப் பார்த்தாராம்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:
சிவசைலம் வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறும் வனத்துறை, அவை ஊருக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பிடிபடும் சிறுத்தைகள் பாபநாசம் வனப் பகுதியிலேயே விடப்படுவதால் அவை எளிதாக மீண்டும் இங்கு வந்து விடுகின்றன.
இதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமாக உள்ளது. சிறுத்தைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், பிடிபடும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் மீது ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தினால் மட்டுமே அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகையைத் தடுக்க முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com