சசிகலா வழக்கு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சசிகலா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சசிகலா வழக்கு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: சசிகலா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் செயல்படும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் செந்தில்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக நீதிமன்றம், அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன் பிறகு அதிமுகவில் பல்வேறு அரசியல் விளையாட்டுகள் அரங்கேறின. வி.கே.சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் முதல்வராக பதவி ஏற்க முடிவு செய்துள்ளார். அதற்காக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்துள்ளார். இதற்கிடையே, சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு தொடர்பாக பல்வேறு தேவையற்ற வதந்திகள் பரவுகின்றன. நீதியை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விசாரணை முடிந்த நிலையில் ஒரு வழக்கின் தீர்ப்பை நீண்ட நாட்கள் தள்ளி வைப்பதால்தான் இதுபோன்ற வதந்திகளும், நீதித்துறைக்கு எதிரான கருத்துகளும் எழுகின்றன. தற்போது இந்த வழக்கில் ஒரு வாரத்துக்குள் தீர்ப்பளிக்க உள்ளதாக டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

இதே வழக்கில், முன்பு ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது பொதுமக்களுக்கு அதிமுக தொண்டர்களால் ஏராளமான சிரமங்களுக்கு ஆளானார்கள். வன்முறைகள் நடந்தன. இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவியேற்று, அதன்பின் வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மீண்டும் அதிமுகவினரால் தமிழகத்தில் இயல்புநிலை பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம். எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை சசிகலா முதல்வராக பதவி ஏற்கக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் மணி, நேற்று உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் முறையிட்டார். இதையடுத்து, வழக்கை இன்று விசாரணை பட்டியலில் சேர்ப்பதாக பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை சசிகலா முதல்வராக பதவியேற்க தடை கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com