ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: விசாரணையை தொடங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் வியாழக்கிழமை விசாரணையை தொடங்கினார்.இது குறித்த விவரம்:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: விசாரணையை தொடங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் வியாழக்கிழமை விசாரணையை தொடங்கினார்.
இது குறித்த விவரம்:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த மாதம் மெரீனா கடற்கரையில் கல்லூரி மாணவர்களும்,இளைஞர்களும் போராட்டத்தை அடுத்து போலீஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மெரீனாவை ஓட்டி உள்ள. நடுக்குப்பத்தில் சிலர் பெட்ரோல் குண்டுகளை போலீஸார் மீது வீசினர். அதேபோல ஐஸ்ஹவுஸ் பகுதியில் திரளாக வந்த சுமார் 500 பேர், காவல் நிலையத்துக்கு தீ வைத்தனர். இதனால் அந்த காவல் நிலையம் முழுவதும் தீப் பிடித்து எரிந்தது. இப் பகுதிகளில் வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார், அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதன் விளைவாக, சென்னை முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் இணை ஆணையர் கார் உள்ட 96 காவல் துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வன்முறையில் 130 காவலர்கள் காயமடைந்தனர். 137 அரசு பேருந்துகள் தாக்கி உடைக்கப்பட்டன. சுமார் 200 பொதுமக்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்: இதையடுத்து, ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து விசாரணை செய்ய, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணைக் குழு வியாழக்கிழமை விசாரணையை தொடங்கியது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான நடுக்குப்பம் மீன் சந்தை, மாட்டாங்குப்பம், அயோத்தி குப்பம், ஐஸ்ஹவுஸ் ஆகியப் பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம், வாகனங்கள் ஆகியவற்றையும் ராஜேஷ்வரன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அவர்களிடம் வன்முறையால் பாதிக்கப்பட்டோர், புகார் தெரிவித்தனர். அந்த புகாரைகளை ராஜேஷ்வரன் கேட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
3 மாதத்துக்கு மேலாகும்: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளேன். பாதிக்கப்பட்டோர் என்னிடம் புகார் மனு அளிக்கலாம். விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக கிரீன்வேஸ் சாலையில் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. இதேபோல வன்முறை ஏற்பட்ட கோவை, மதுரை ஆகிய ஊர்களிலும் விசாரணை நடத்தப்படும்.
வன்முறையால் பாதிக்கப்பட்டோர் தனித்தனியாக விசாரணை செய்யப்படுவார்கள். காவல்துறை தரப்பிலும் வன்முறையால் பாதிக்கப்பட்டோரிடம் விசாரணை செய்யப்படும். வன்முறையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ ஆதாரங்களில் அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து விசாரணையும் முடிந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாதத்துக்கு மேல் ஆகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com