ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை வரவேற்கத்தக்கது

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தமிழகத் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை வரவேற்கத்தக்கது

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தமிழகத் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் 3 முறை தில்லிக்குச் சென்று தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணமாக ரூ. 25 ஆயிரம் கோடியும், வர்தா புயல் பாதிப்புக்கு ரூ. 25 ஆயிரம் கோடியும், வறட்சி பாதிப்புக்கு ரூ. 25 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்க கோரியிருந்தார். ஆனால், மத்திய அரசு வெறும் ரூ. 2 ஆயிரம் கோடியே ஒதுக்கியது. மேலும் மத்திய அரசு குழு பார்வையிட்டு அறிக்கை அளித்த பிறகும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும், அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உடனிருந்துள்ளார். பின்னர், முதலமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா உடல்நிலை குறித்து நேரில் வந்து விசாரித்துச் சென்றனர். சிகிச்சை குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
ஆனால், மக்கள் மத்தியில் நீடித்து வரும் பல்வேறு சந்தேகத்தைத் தீர்க்கும் நோக்கில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு இந்த விசாரணை நடத்தி, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலமே, தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு செய்திகளுக்கு தெளிவு கிடைக்கும்.
தற்போது அதிமுகவில் நீடிக்கும் குழப்பமான சூழ்நிலைக்கு காரணம் பிரதமர் மோடிதான். பாரதிய ஜனதா கட்சியால் தமிழகத்தில் எந்தச் சூழ்நிலையிலும் காலூன்ற முடியாது என்றார் சு. திருநாவுக்கரசர்.
அப்போது நிர்வாகிகள் தி. புஷ்பராஜ், அ. சுந்தர்ராஜன், சி. சாமிநாதன், துரைதிவியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com