ஞானதேசிகன், அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி: தமிழக அரசு உத்தரவு

கடந்த ஆண்டு இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி வழங்கி தமிழக அரசு

சென்னை: கடந்த ஆண்டு இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய அரசுத் துறைகளான நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ஞானதேசிகன், தலைமைச் செயலாளராக 2.12.14 அன்று பதவியேற்றார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி ஞானதேசிகன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளராக பி.ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார். (தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்).

டிட்கோ தலைவராக பணியாற்றி வந்த ஞானதேசிகன் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டார். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 01.09.16 அன்று தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சங்கம் கூடி, முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக இடைக்கால பணி நீக்கத்தில் ஞானதேசிகன் இருந்தார். தற்போது இடைக்கால பணி நீக்க உத்தரவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதோடு அவருக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக பதவி அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஞானதேசிகன், 1982-ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார். தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியல் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார்.

அதுபோல, ஞானதேசிகன் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்ட அன்று, மண்ணியல் மற்றும் சுரங்கங்கள் ஆணையராகவும், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் இருந்த அதுல் ஆனந்தும் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

தற்போது, அதுல் ஆனந்துக்கு எதிரான இடைக்கால பணிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையராக பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com