நடுக்குப்பத்தில் தாற்காலிக மீன் சந்தை அமைப்பு: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தீயில் எரிந்த மீன் சந்தையை நிரந்தரமாக கட்டுவதற்கு ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு

ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தீயில் எரிந்த மீன் சந்தையை நிரந்தரமாக கட்டுவதற்கு ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து சென்னை மாநகரின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.
இதில் நடுக்குப்பம் பகுதியில் உள்ள கடைகள், தாற்காலிக மீன் விற்பனை கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. மீனவர்கள் பலரும் படுகாயமடைந்தனர். வன்முறையில் காயமடைந்த மீனவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ முகாம் அமைக்கவும், தீயில் எரிந்த மீன் சந்தை, கடைகளைத் திரும்பவும் கட்டி தருவதற்கு அரசுக்கு உத்தரவிட கோரி வழக்குரைஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர், இந்த விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் வன்முறையில் தீ வைக்கப்பட்ட நடுக்குப்பம் மீன் சந்தையில், மீன் வளத்துறை சார்பில் ரூ.70 லட்சம் செலவில் தாற்காலிகமாக 92 கடைகள் அமைக்கப்பட்டு பிப்ரவரி 7-ஆம் தேதி சந்தை செயல்பட தொடங்கியது.
நிரந்தர புதிய மீன் சந்தை அமைக்கப்படவுள்ளது என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்குரைஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com