பாலமேட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்; 50 வீரர்கள் காயம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 50 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளையை அடக்க முயன்ற இளைஞர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளையை அடக்க முயன்ற இளைஞர்.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 50 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
பாலமேட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்க, 850 காளைகள், 1,607 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
வாடிவாசல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு நிபந்தனைகளை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, காலை 9.10 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. பாலமேடு கோயில் காளைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டன. அங்கு பூஜைகள் செய்த பின்னர், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு இடையே முதலாவதாக அய்யனார் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
கோயில் காளைகள்: இதைத் தொடர்ந்து, மகாலிங்கம் மடத்துக்குச் சொந்தமான காளை, பத்ரகாளியம்மன் கோயில் காளை, பாலமுருகன் கோயில் காளை, பட்டாளம்மன் கோயில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளை அடக்கக் கூடாது என்பதால், வீரர்கள் கோயில் காளைகளை வணங்கினர்.
பின்னர், வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ததால் அனைவருக்கும் சமமாக வாய்ப்பு வழங்குவதற்காக 200 பேர் கொண்ட குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு மணி நேரம் காளைகளை அடக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
காளையர்களை பந்தாடிய காளைகள்: அப்போது, வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வந்த காளைகளின் திமிலைப் பற்றி வீரர்கள் அடக்கினர். இதில், பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல், களத்தில் சற்று நேரம் நின்று விளையாடின. திருச்சி, கருப்பாயூரணி, பூதகுடி, சிக்கந்தர் சாவடி, ஊத்தங்குடி, பொந்துகம்பட்டி, வாடிப்பட்டி, பூலாம்பட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் மாடுபிடி வீரர்களை கொம்புகளால் தூக்கி வீசி பந்தாடின. சில காளைகள் பின்னால் வந்து பிடிக்க முயன்ற வீரர்களை கால்களால் உதைத்துத் தள்ளின. பூலாம்பட்டியைச் சேர்ந்த ஒரு காளை 15 நிமிடங்களுக்கும் மேலாகக் களத்தை பலமுறைச் சுற்றி வந்து வீரர்களை தூக்கி வீசியது.
50க்கும் மேற்பட்டோர் காயம்: காளைகளை அடக்க முயன்ற 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதில், லேசான காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்த 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வீரர்கள் வெளியேற்றம்: ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் காளைகளை அடக்கியச் சிறந்த வீரர்களின் எண்கள் வாசிக்கப்பட்டு அவர்கள் அடக்கிய காளைகளின் எண்ணிக்கையும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்தச் சுற்றுகளிலும் பங்கேற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்காணித்த ஆட்சியர் வீரராகவ ராவ், விதிகளை மீறிய வீரர்களை வெளியேற்றினார். மொத்தம் 354 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.
மதுரை சரக டிஐஜி ஆனந்தகுமார் சோமானி தலைமையில் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) ஆர்.சக்திவேல் உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வீரர்களுக்கு பரிசு மழை
ஜல்லிக்கட்டுப் போட்டியின் முடிவில் அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கருப்பணன் (9 காளைகள்), முதலைக்குளத்தைச் சேர்ந்த கே.சிவக்குமார் (7 காளைகள்), மனப்பட்டியைச் சேர்ந்த பி.செந்தில் (6 காளைகள்), மேலூரைச் சேர்ந்த பிரபாகர் (6 காளைகள்), ஊர்சேரியைச் சேர்ந்த சிலம்பரசன் (4 காளைகள்) ஆகியோர் சிறந்த மாடுபிடி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கருப்பணனுக்கு புல்லட் வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல், பால்பாண்டி என்பவரின் காளையை அடக்கிய, விராட்டிபத்தைச் சேர்ந்த அன்புசிவா என்பவருக்கும் புல்லட் வழங்கப்பட்டது.
மேலும், வீர விளையாட்டுப் பேரவைத் தலைவர் பி.ராஜசேகரனின் 3 காளைகள், சிக்கந்தர்சாவடி அன்புவின் காளை, பூதகுடி அய்யாத்துரை காளை, கருப்பாயூரணி செல்வம் காளை, ஊத்தங்குடி கருப்பாசாமியின் காளை ஆகியவை சிறந்த காளைகளாக் தேர்வு செய்யப்பட்டு உரிமையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு எவ்விதப் பிரச்னையும் இன்றி நிறைவடைந்ததாக, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராகவ ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஊடகங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏராளமானபோலீஸார் அமர்ந்து கொண்டதால், பளு தாங்காமல் 3 மேடைகள் சரிந்தன. இதில் சிக்கிய பொதுமக்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.
மேலும்,காளைகள் செல்லும் வழியில் ஏராளமான வெளிநபர்கள் உள்ளே நுழைந்ததால், காளைகள் செல்ல வழியின்றி வாடிவாசலுக்கு திரும்பி வந்து வீரர்களை முட்டின. இதையடுத்து, அதிரடிப்படை வீரர்கள் சென்று வெளிநபர்களை விரட்டினர்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெற்றதால், ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com