அரசியல் குழப்பம், அதிகாரப் போட்டியால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது! ராமதாஸ்

அரசியல் குழப்பம், அதிகாரப் போட்டியால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் குழப்பம், அதிகாரப் போட்டியால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது! ராமதாஸ்

அரசியல் குழப்பம், அதிகாரப் போட்டியால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டி, இந்த விஷயத்தில் தமிழக ஆளுனர் உறுதியான முடிவெடுக்காமல் தாமதம் செய்வது ஆகியவற்றால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், தமிழக அரசு நிர்வாகம் முழுமையாக முடங்கியிருக்கிறது.

தமிழகம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் ஞானத்துடனும், அதிரடியாகவும் பல முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில் தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது ஆகும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழகத்தின் நலன் சார்ந்த பல சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற்று, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இந்த சட்ட முன்வடிவு ஆளுனர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, சுகாதாரம் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகங்களின் ஒப்புதல் பெற்று நிறைவாக குடியரசுத் தலைவர் ஒப்புதல்  பெற்றால் தான் சட்டமாகும். அப்போது தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற முடியும். இதற்கான அவசியத்தை தினத்தந்தி நாளிதழ் இன்று எழுதியுள்ள தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்தத் தேர்விலிருந்தும் தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும். அப்போது தான் ஏழை மற்றும் ஊரக மாணவர்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் கனவுகளை நனவாக்க முடியும். தமிழகத்தில் நிலையான அரசு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே தொடங்கி விட்டது. மார்ச் 01-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்குள் தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்றால் தான் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க முடியும். இல்லாவிட்டால், தமிழக ஆட்சியாளர்களை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் அத்தேர்வையும் எழுத முடியாமல் பாதிக்கப்படுவார்கள்.

இவை மட்டுமின்றி, உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டிய பல முக்கியக் கோப்புகள் முதல்வர் அலுவலகத்திலும், அமைச்சர்கள் அலுவலகங்களிலும் முடங்கிக் கிடக்கின்றன. தமிழகத்தில் 2005-ஆம் ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகளாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாத நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலக்கட்டத்திற்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்க வேண்டுமானால் அதற்காக பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கண்காணிக்க வேண்டியதும், பணிகளில் தொய்வு ஏற்படும் போது அதை விரைவுபடுத்த வேண்டியதும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பணியாகும். ஆனால், இப்போது அமைச்சர்களே இல்லை; ஸ்மார்ட் அட்டை தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்படாத நிலையில், ஏப்ரல் மாதத்தில் அவற்றை வழங்க முடியாது. இதனால் பொதுவினியோகத் திட்டத்தில் குழப்பம் ஏற்படும்.

இதற்கெல்லாம் மேலாக 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்தில்  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் அத்தியாவசியப் பணிகளுக்குக் கூட போதிய நிதி  ஒதுக்க முடியாத நிலை ஏற்படும். இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் , தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அத்தீர்வு மக்கள் விரும்பும் தீர்வாக அமைய வேண்டும். ஒருவேளை, பல்வேறு காரணங்களால், அந்தத் தீர்வு உடனடியாக சாத்தியமில்லை என்று ஆளுனர் கருதுவாரேயானால், தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதன்மூலம், தமிழகத்தில் நிலவும் அதிகாரப்போட்டி மற்றும் அரசியல் குழப்பத்தால் தமிழக மக்களும், மாணவர்களும் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com