ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமை வகித்தார்.
மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தையும், கட்சியின் சொத்துகளையும் கைப்பற்றுவதற்கான போட்டி முனைப்பாக நடக்கிறது. அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவரை தேர்வு செய்வது அந்தக் கட்சியின் விருப்பம் என்றபோதும், முதல்வர் ஆவதற்கு சசிகலா காட்டும் அவசரம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சில தினங்களில் வர உள்ள நிலையில் அவசரமாக பதவி ஏற்க முயற்சிப்பது தார்மிகமாக சரியல்ல. குறுகிய காலத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புக்கு வர விரும்புவது, இயல்பாகவே ஏற்பு தன்மையை உருவாக்கவில்லை.
காபந்து முதல்வரான பன்னீர் செல்வம் குற்றச்சாட்டுகளை எழுப்பினாலும், கடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இல்லை.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் உள்ள நெருக்கடியான சூழலில், மத்திய அரசு என்கிற அதிகாரத்தையும் பயன்படுத்தி தமிழகத்தில் கால் ஊன்ற பாஜக முயற்சித்து வருகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில், அரசியல் சட்ட நடைமுறைப்படி ஆளுநர் நடந்திருக்க வேண்டும். நெருக்கடி நிலவுகிறது என்று தெரிந்தும் சென்னை வராமல் கிளம்பிச் சென்றதும், அடுத்தகட்ட நடவடிக்கையைத் தள்ளிப் போடுவதுமான ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது.
பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை தம் அரசியலுக்கு சாதகமாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.
கடந்த காலத்தில் காங்கிரஸும் இதே அணுகுமுறையைப் பின்பற்றியது.
எனவே, காலத்தை மேலும் நீட்டிக்காமல், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை சட்டப்பேரவை வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கிற நடவடிக்கையை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com